‘பாரிசானைத் தோற்கடிப்பதில் கவனம் செலுத்துங்கள், எங்களை விமர்சித்து நேரத்தை வீணடிக்காதீர்கள்’, பக்காத்தான் ஹராப்பானுக்குப் பி.எஸ்.எம். கோரிக்கை

arul - harapanஜ.செ.க.-வும் பக்காத்தான் ஹராப்பானும் பாரிசானைத் தோற்கடிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, மலேசிய சோசலிசக் கட்சியை (பி.எஸ்.எம்.) விமர்சிப்பதில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என அக்கட்சியின், 14-ஆம் பொதுத்தேர்தலின் தேசியப் பிரச்சார இயக்குநர் எஸ்.அருட்செல்வன் கூறியுள்ளார்.

“எதிர்வரும் பொதுத்தேர்தலில், தேசிய அளவில் 3% மட்டுமே பி.எஸ்.எம். போட்டியிடவிருக்கிறது, மற்ற 97% தொகுதிகளிலும், பி.எஸ்.எம். எதிர்க்கட்சிக்குதான் ஆதரவளிக்கும்,” என்ற அவர், “ஆனால், எதிர்க்கட்சி நிறுத்தும் வேட்பாளர்கள் தகுதியுள்ளவர்களாக, நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.

“2008-ல் மக்கள் கூட்டணியின் 3 வேட்பாளர்கள் பாரிசானுக்குத் தாவியதால் ஒரு மாநிலத்தையே மக்கள் கூட்டணி இழக்க நேரிட்டது,” என, பேராக் மாநிலத்தில் மக்கள் கூட்டணி வீழ்ந்ததற்கான காரணத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

“ஆக, தரமான வேட்பாளர்களைத் தேர்தலில் நிறுத்துவது மிக முக்கியம்.”

எல்லாத் தொகுதிகளிலும் பக்காத்தான் ஹராப்பான் போட்டியிடுகிறது, அதில் பெரும் அளவிலான தொகுதிகளில் பாஸ் கட்சியும் போட்டியிடுகிறது. பி.எஸ்.எம். தேர்தல் அறிவிப்பு செய்வதற்கு முன்பே, பி.கே.ஆர். மற்றும் ஐ.செ.க. சுங்கை சிப்புட்டில் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டன. ஆக, பி.எஸ்.எம். எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், பாரிசானையும் பக்காத்தான் ஹராப்பானையும் எதிர்க்க வேண்டிய சூழ்நிலைதான் இப்போது இருக்கிறது என்றார் அவர்.

“பேராக்கில் பி.எஸ்.எம். போட்டியிடும் தொகுதிகள் யாவும் நாங்கள் மக்களுக்குச் சேவை செய்த தொகுதிகள், அவை ஜ.செ.க.-வின் தொகுதிகளாகவும் அமைந்துவிட்டன. பி.எஸ்.எம் போட்டியிடும் மற்றத் தொகுதிகள் பி.கே.ஆர்., பெர்சத்து, அமானா அல்லது பாஸ் தொகுதிகளாகவும் இருக்கலாம், ஆனால், அவை நாங்கள் மக்கள் பணி செய்த தொகுதிகள் என்பதுதான் உண்மை,” என்று அருட்செல்வன் தெளிவுபடுத்தினார்.

காலஞ்சென்ற கர்ப்பால் சிங், பி.எஸ்.எம்.-மை ஹராப்பானில் இணைத்துக் கொள்ளாமைக்கு வருத்தம் தெரிவித்தார் என அருட்செல்வன் கூறினார்.

டத்தோ அம்பிகா, ஹராப்பான் உருவான தருணமே பி.எஸ்.எம்.-மை அக்கூட்டணியில் இணைத்துக்கொள்ளப் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஹராப்பான் கூட்டணியிடம் பரிந்துரை செய்ததாகவும்; ஆனால், இன்றுவரை அதற்கான ஆர்வத்தை ஹராப்பான் காட்டியதில்லை, பேச்சுவார்த்தைக்கும் பி.எஸ்.எம். அழைக்கப்பட்டதில்லை.  ஆகவே, இப்போது ங்கா கோர் மிங்-கின் இந்தக் கோபம் தங்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறது என்றார் அருட்செல்வன்.

நேற்று, ஜ.செ.க.-வின் பேராக் மாநிலத் தலைவர் ங்கா கோர் மிங் வெளியிட்டிருந்த செய்தி குறித்து கேட்டபோது, எஸ்.அருட்செல்வன் இவ்வாறு கருத்துரைத்தார்.

“நாங்கள் ஜெலாப்பாங் தொகுதியில் வைப்புத் தொகையை இழந்தது போலவே, 2004-ல் ஜ.செ.க.-வும் சுங்கைSungai_Siput_PSM_jeyakumar சிப்புட்டில் வைப்புத் தொகையை இழந்துள்ளது. நாங்கள் வைப்புத் தொகையை இழந்த இடத்தில் ஜ.செ.க. வெற்றிப் பெற்றது, ஆனால், ஜ.செ.க. வைப்புத் தொகையை இழந்தது பாரிசானுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.”

“ஆக, ஜ.செ.க. டாக்டர் ஜெயக்குமாரை எதிர்த்து சுங்கை சிப்புட்டில் போட்டியிட்டால் இதுதான் நடக்கப்போகிறது – மறைமுகமாக, பாரிசானுக்கு உதவப்போவது ஜ.செ.க.தான். மும்முனை போட்டியிட்டாலும் நாங்கள் வெல்வோம் என்று மார்தட்டிக் கொள்ளும் ங்கா-விற்கு இது புரியவில்லையா,” என்று அருட்செல்வன் கேள்வி எழுப்பினார்.

“சுங்கை சிப்புட்டில் போட்டியிடப்போகும் டாக்டர் ஜெயக்குமார் கண்டிப்பாக பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்குத்தான் ஆதரவளிப்பார், பாரிசானுக்கு அல்ல.”

“பேராக்கில் ஜ.செ.க.-வை அழிக்க திட்டமிட்டிருந்தால், ஜ.செ.க. பலவீனமாக இருக்கும் தொகுதிகளைத் தேடிப் பிடித்து, அங்கே பி.எஸ்.எம். வேட்பாளர்களை நிறுத்தியிருப்போம். ஆனால், எங்கள் நோக்கம் அதுவல்ல,” என்றும் அருட்செல்வன் கூறினார்.

மக்கள் சேவை செய்த தொகுதிகளில் மட்டும்தான் பி.எஸ்.எம். போட்டியிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உதாரணமாக, பத்து காஜா வட்டாரங்களில்  விவசாயிகள், விவசாய நிலப்பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள பட்சத்தில், அவர்களின் உரிமை காக்க விவசாயிகளின் பிரதிநிதி ஒருவர் போட்டியிடப்போவதாக அவர் விளக்கப்படுத்தினார்.

ஆக, தங்களின் முகான்மையான நோக்கத்தில் கவனம் இருக்க வேண்டுமே தவிர, பி.எஸ்.எம். பற்றி விதண்டாவாதம் செய்து நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றும் அருட்செல்வன் கேட்டுக்கொண்டார்.

எந்த ஒரு கூட்டணியிலும், அக்கூட்டணியைத் தொடங்கிய கட்சிதான் அதை வளர்ப்பதற்கானப் பங்கையும் ஆற்ற வேண்டும். அப்படிப் பார்க்கையில், ஹராப்பான் கூட்டணியில், பி.எஸ்.எம்.-ஐ இணைப்பதிலோ அல்லது தேர்தல் கூட்டணி அமைப்பதிலோ ஹராப்பான் எந்த விருப்பத்தையும் இதுவரை காட்டியதில்லை என்றும், ஆனால், மும்முனை போட்டியைத் தவிர்க்க தேர்தல் கூட்டணி அமைக்கலாம் என பி.எஸ்.எம்.  வெளிப்படையாகக் கூறியுள்ளதாகவும் அருட்செல்வன் தெரிவித்தார்.

“ஓர் அரசியல் கட்சியான பி.எஸ்.எம்-மிற்குத் தேர்தலில் போட்டியிடும் உரிமை உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட்டாலும் எங்களால் மக்களுக்கு ஒரு மாற்றுத் தேர்வை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் சொத்துக்களைப் பொதுவில் அறிவிப்பர் எனவும், இனவாத அரசியல் நடத்த மாட்டார்கள் எனவும் எங்களால் உறுதி கொடுக்க முடியும். ஜனநாயகம் என்பது இதுதான்,” என்று பி.எஸ்.எம்-ன் மத்திய செயலவை உறுப்பினருமான அருட்செல்வன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.