ஜோகூர் எப்போதும் பிஎன் கோட்டையாக திகழ்ந்து வந்துள்ளது. ஆனால், இப்போது ஐயத்துக்கிடமின்றி அங்கு மாற்றம் தென்படுகிறதாம்.
ஜோராக் சட்டமன்ற உறுப்பினர் ஷாருடின் சாலே அம்னோவிலிருந்து விலகி பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) -வில் சேர்ந்ததை அடுத்து பிஎன் முதல்முறையாக ஜோகூர் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்துள்ளது.
அம்மாநிலத்தில் பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று வந்துள்ள அமனா துணைத் தலைவர் சலாஹிடின் ஆயுப், அங்குள்ள மக்கள் “விரும்பி வரவேற்பதை உணர முடிகிறது” என்றார்.
“எனக்குள்ள அரசியல் அனுபவத்தைக் கொண்டு சொல்கிறேன், மாற்றத்துக்கான அறிகுறிகளை அறிய முடிகிறது”, என்றாரவர்.
கடந்த பொதுத் தேர்தலில், 56 சட்டமன்ற இடங்களில் 38-டைப் பிஎன் வென்றது. பக்கத்தான் ரக்யாட்டுக்கு 18 இடங்கள் கிடைத்தன.
இப்போதைய மாற்றத்துக்குக் காரணம் பக்கத்தான் ஹரபான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் பெர்சத்து தலைவர் முகைதின் யாசினும்தான் என சலாஹுடின் கூறினார். முகைதினுக்கு அங்கு செல்வாக்கு நிறையவே இருக்கிறது என்றார்.