சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், பேங்க் நெகராவின் அன்னிய செலாவணி இழப்புமீது விசாரணை நடத்திவரும் அரச ஆணைய (ஆர்சிஐ)த்திடம் நாளை வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாட்சிகளின் பட்டியலிலிருந்து இது தெரிய வருவதாக அன்வாரின் வழக்குரைஞர் ஆர்.சிவராசா கூறினார்.
“சாட்சிகளின் பட்டியலில் அவர் நாளை சாட்சியம் அளிப்பார் என்றிருக்கிறது”, என சிவராசா இன்று காலை புத்ரா ஜெயாவில் கூறினார்.
ஆர்சிஐ விசாரணையின் முதல் நாளில் சாட்சியமளித்த பேங்க் நெகரா முன்னாள் கவர்னர் அப்துல் மூராட் காலிட், அன்னிய செலாவணி விவகாரம் குறித்து அன்வாருக்கு விளக்கமாக எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.
அதற்கு அன்வார், அவ்விவகாரம் வெளிவந்தால் தாம் பதவி விலக வேண்டிவரும் என்று குறிப்பிட்டதாகவும் மூராட் கூறினார்.
முராட்டிடமிருந்து தகவலறிந்த அன்வார் அவ்விவகாரம் குறித்து 1993-இல் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார் என சிவராசா கூறினார்.