பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல், பி.எஸ்.எம். கண்டனம்

saras tamil malarதமிழ் மலர் பத்திரிக்கையின் தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அதன் உரிமையாளர் ஓம்ஸ் தியாகராஜன் மற்றும்  தலைமை ஆசிரியர் சரஸ்வதி கந்தசாமி ஆகிய இருவரையும் கும்பல் ஒன்று  தாக்கியதை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவர் சரஸ்வதி முத்து தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றும், ஒரு துணையமைச்சரும் இந்தத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தது மேலும் வருத்தமளிப்பதாகவும் மு.சரஸ்வதி குறிப்பிட்டார்.

இச்செயல், நாட்டில் அரசியல் வன்முறை கலாச்சாரம் மீண்டும்  தலைதூக்கி இருப்பதை உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

“இந்திய சமூகத்திற்கு நன்கு அறிமுகமான,  பல அறச்செயல்களில் ஈடுபட்டுவரும் ஓம்ஸ் தியாகராஜனையும் வழக்கறிஞர் க. சரஸ்வதியையும் தாக்கியதோடு,  ஒரு பெண் என்றும் பாராமல்  அவரை மரியாதையின்றி பேசியது ஓர் அநாகரீகமான செயல்,” என்று அவர் வர்ணித்தார்.

“நாட்டிலுள்ள ஒவ்வொரு நாழிதழும்  உள்நாட்டுப் பாதுக்காப்புத்துறை அமைச்சின் அனுமதியோடுதான் இயங்கி வருகின்றன. அதில்  வெளிவரும்  செய்திகள் உண்மைக்குப் புறம்பாகவோ  அவதூறாகவோ இருந்தால்,  பாதிக்கப்பட்டவர்கள் முறையாக அவை சார்ந்த அமைச்சிடம் புகார் செய்திருக்க வேண்டும். விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்பி இருக்கலாம், இல்லையேல், சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம்.”

“அவ்வாறு செய்யாமல், எதற்காக தமிழ் மலர்  அலுவலகத்திற்குச் சென்று, அதன் பொறுப்பாளர்களைத் தாக்க வேண்டும்?  இதுதான் இந்திய சமூகத்தின் பிரதிநிதி எனக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சியின் தார்மீகப் பணியா?”, என்று சரஸ் கேள்வி எழுப்பினார்.

மேலும், “வன்முறை கலாச்சார்த்தை இளைஞர்கள் மத்தியில் துடைதொழிக்க,  ம.இ.கா இளைஞர் பகுதி  மேற்கொண்டுவரும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஊருக்கு மட்டும் செய்யும் உபதேசம் தானா?”, என்றும் அவர் கேட்டார்.

நாட்டின் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இவ்வாறான வன்முறைச்செயல்கள் மீண்டும் தொடராமல்  இருக்க, புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும்  போலீஸ் படைத்தலைவர் ஆவன செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“இவ்விவகாரத்தில்  எந்தவொரு பாகுபாடுமின்றி, வன்முறையில் ஈடுபட்ட அனைவர்  மீதும், உடனடியாக  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று சரஸ்வதி காவல்துறையைக் கேட்டுக்கொண்டார்.