வேதமூர்த்தி : சார்லஸ் சந்தியாகு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்

Waythamoorthy-Charles-Santiagoகடந்த வாரம், ஜசெக-வின் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, தனக்கு எதிராக, அவதூறான கருத்துகளைச் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததற்கு மன்னிப்பு கோர வேண்டுமென ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி கேட்டுக்கொண்டார்.

“என் வழக்குறைஞர் கார்த்திகேசன் வழி, நான் சார்லஸ்சுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். எனக்கெதிரான தனிப்பட்ட அவரது கருத்துகளுக்கு, அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் அவ்வாறு மன்னிப்பு கேட்கத் தவறினால், எனக்கு எதிராக தீய நோக்கத்துடனும் தவறாகவும் ஆதாரம் இல்லாமலும் சொன்ன குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்கும்படி அவர் மீது நான் வழக்கு தொடர்வேன்,” என வேதமூர்த்தி விளக்கப்படுத்தினார்.

“அவரின் அவதூறான கருத்திற்கு நான் பதில் சொல்லிவிட்டேன். அதேவேளை, ஹிண்ட்ராஃப் மற்றும் அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் நற்பெயரைக் காக்கவும் இந்தச் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்,” என அவர் மேலும் கூறினார்.

சார்லஸ் சந்தியாகு, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு இந்தியர்களின் ஆதரவு எப்படி திரண்டது என்ற வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில், தான் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தீர ஆலோசனை செய்த பிறகே இம்முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார்.

சார்லஸ் சந்தியாகுவின் தாக்குதல் தன்மீது தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டது என்பதைவிட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலான ஹிண்ட்ராஃப் மீதும் அதன் முக்கியப் போராட்டத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக தாம் கருதுவதாக அவர் மேலும் கூறினார்.

“ஹிண்ட்ராஃப்  இயக்கத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், இந்தியர்களின் மீட்சிக்கு உண்மையாகப் பணிபுரிபவர்களைக் குற்றம் சாட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் இவரைப் போன்றவர்களை அனுமதிக்கமுடியாது,” என்றார் அவர்.

“மலேசிய இந்தியச் சமுதாய அடித்தட்டு மக்கள்  அனுபவிக்கும் அவலங்களை எல்லாம் மறந்துவிட்டு, அரசியலில் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கும் இவர்களைப் போன்ற மேல்தட்டு அரசியல்வாதிகளால், இந்தியச் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லை,” என்றும் அவர் கூறினார்.

ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கிற்கும் இதன் தொடர்பில் கடிதம் எழுத உள்ளதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.

“சார்லஸின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள் குறித்தும், அவர் மேற்கொண்ட தனிப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் அந்தக் கடிதத்தில் நான் விரிவாகக் குறிப்பிடவுள்ளேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை, வழக்கறிஞர் கார்த்திகேசன் மூலம் சந்தியாகுவிற்கு மன்னிப்பு கோரும் கடிதம் அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“நலிந்த இந்தியர்களின் மேம்பாட்டிற்குப் பாடுபடும் ஹிண்ட்ராஃப் இயக்கத்தைப் பழி சொல்லவும் குறைகூறவும் முற்படும் எவரையும் அனுமதிக்க மாட்டோம்,” என்று வேதமூர்த்தி ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.