லிம் கிட் சியாங்: பாஸ் ஐந்து மாநிலங்களைப் பிடிக்கும் என்பது வெறும் தற்பெருமைப் பேச்சு!

 

Kitrealityஅடுத்தப் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி ஐந்து மாநிலங்களைப் பிடிக்கும் என்று ஜம்பமடித்துக்கொள்கிறது. அது நடக்காது என்கிறார் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்.

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அடுத்தப் பொதுத் தேர்தலில் ஐந்து மாநிலங்களைக் – கிளந்தான், திரங்கானு, கெடா, பகாங் மற்றும் சிலாங்கூர் – கைப்பற்றும் என்று தற்பெருமை அடித்துக்கொள்கிறார்.

கிளந்தானைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களை பாஸ் கைப்பற்றும் சாத்தியமே இல்லை. ஆறு முறை தொடர்ந்து கிளந்தானில் வெற்றி பெற்ற பாஸ், இம்முறை வெற்றி பெறுமா என்பதே ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது என்று கிட் சியாங் கூறினார்.

பாஸின் கூற்று நிறைவேற வேண்டுமானல், அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றுக்கிடையில் ஏதோ ஒரு வனையான ஏற்பாடு இருக்க வேண்டும் என்று கூறிய கிட் சியாங், பாஸ் ஐந்து மாநிலங்களில் அரசாங்கம் அமைக்க பிரதமர் நஜிப் ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

பாஸ் கட்சியின் இக்கூற்று சாத்தியமற்ற ஒன்று என்றாலும், பக்கத்தான் ஹரப்பான் எதற்கும் முழுத் தயார் நிலையில் இருக்க வேண்டும். தற்போது கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலாங்கூர் மாநிலம் மிகச் சிறந்த தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கிட் சியாங் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநில ஹரப்பான் தலைமைத்துவ கட்டமைப்பை உருவாக்கியதற்காக சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியை கிட் சியாங் பாராட்டினார்.

பாஸ் அதன் சொந்த பலத்தில் சிலாங்கூரை மாநிலத்தைப் பிடிப்பது கனவில்கூட நடக்காது என்றாரவர்.