‘நச்சு அரசியலைத் துடைத்தொழிப்போம்!’ – ஊதா பேரணியைச் சித்தி அஸ்மா வழிநடத்தினார்

சித்தி 1டாக்டர் சித்தி அஸ்மா முகமட் அலி மென்மையானவர் என்று எல்லோராலும் அறியப்பட்டவர்; எதிர்ப்பைத் தெரிவிக்க பேரணியைக் கூட்டும் அம்பிகா சீனிவாசன், மரியா சின் அப்துல்லா போல் அனுபவம் மிக்க ஆர்வலர் இல்லை சித்தி ஹஸ்மா.

ஆனால், இன்று மாலை, கோலாலம்பூரில் சுமார் 1,000 பேர் முன்னிலையில் அவர் நின்றிருந்தார். ஊதா நிற உடையணிந்திருந்த அவர்கள், ‘நச்சு அரசியல்’ –லுக்கு எதிராகக் குரல்கொடுக்கத் திரண்டிருந்தனர், அவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆவர்.

பேரணியில் உரையாற்றிய சித்தி அஸ்மா, ‘நச்சு அரசியல்’-லைத் துடைத்தொழிக்க வேண்டிய அவசியத்தை விளக்கி, கூடியிருந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இன்றைய அரசியல் மிகவும் வருந்தத்தக்க நிலையில் உள்ளது, ஒருவர் தனது சொந்த கருத்தை வெளிப்படுத்துவதற்குக் கூட சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது, என 91 வயதான சித்தி அஸ்மா வருத்தம் தெரிவித்தார்.

“அதனால்தான், பெண்கள் நாங்கள் ‘நச்சு அரசியலை’ எதிர்க்கிறோம், அந்த நச்சு நம் உடலுக்குள் புகுந்து, சித்தி 2நாசப்படுத்துவதற்குள், நாம் அதனைத் தடுக்க வேண்டும், நிறுத்த வேண்டும் …..

“ஆகவே, பெண்களே, வாருங்கள் நாம் நடப்போம்,” என்று அவர் கூறியபின், அப்பேரணி சோகோ பேரங்காடியை நோக்கி நகர்ந்தது.

‘நச்சு அரசியலை எதிர்க்கும் பெண்கள்’ என்ற இன்றையப் பேரணி, அரசியல் வன்முறை, அச்சுறுத்தல், இனவெறி, பாலியல், வெறுப்பு பேச்சு , அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் பொது அரசியலமைப்பின் தூய்மை ஆகியவற்றை உறுதி செய்ய தவறியதை எதிர்த்து நடைபெற்றது.

இன்றையப் பேரணியில், அம்பிகா சீனிவாசன், மரீனா மகாதீர், டாக்டர் வான் அஷிஷா என பல முன்னணி பெண் தலைவர்கள் கலந்துகொண்டனர்.