கல்வி அமைச்சர்: சரியான நேரம் வரும் போது, யூபிஎஸ்ஆர் தேர்வு மாற்றப்படும்

Mahdzir-Khalid-upsrபொருத்தமான பிரதியீடு வரும்வரை, யூபிஎஸ்ஆர் தேர்வு தொடரும் எனக் கல்வி அமைச்சர் மாஹ்ட்ஷீர் காலிட் தெரிவித்துள்ளார்.

சரியான தேர்வு முறையை அடையாளம் காண, பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் ஆய்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

“அனைத்து தரப்பினருடனான கலந்துரையாடல்கள் நிறைவடையும் வரை, யூபிஎஸ்ஆர் தொடரும், அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். பெற்றோர்கள், தொழில் நிபுணர்கள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள் என அனைவருடனும் ஒன்றாக உட்கார்ந்து, முடிவெடுக்க வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

“நடப்பில் இருக்கும் யூபிஎஸ்ஆர் தேர்வை மாற்றுவது, எளிதான காரியம் அல்ல, சரியான நேரம் வரும்போது, நாம் அதனை மாற்றி அமைப்போம்,” என்று ஶ்ரீ காயா தேசியப் பள்ளிக்கு வருகையளித்த பின் அவர் இவ்வாறு கூறினார்.

இன்று தொடங்கிய யூபிஎஸ்ஆர் தேர்வை, நாடுதளுவிய அளவில் 443,794 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 433,536 பேர் அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், எஞ்சியவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள் ஆவர்.

இதற்கிடையில், 6 -ஆம் ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி அறிக்கை, கல்வி அல்லது யூபிஎஸ்ஆர் முடிவுகளை மட்டுமல்லாமல், பள்ளி புறப்பாட நடவடிக்கை, ஆளுமை மற்றும் விளையாட்டு ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்குமென்றும் மாஹ்ட்ஷீர் தெரிவித்தார்.

“ஆக, ஒரு மாணவனுக்குக் கிடைக்கும் மதிப்பெண்கள் கல்வி சார்ந்தது மட்டுமல்ல. மாணவர்களின் சாதனையை முழுமையாகப் பார்க்க வேண்டும். அதனால்தான், பள்ளிகளில் ஆசிரியர்கள் மதிப்பெண்கள் கொடுக்கின்றனர்,” என்றார் அவர்.

இத்தகைய மதிப்பீடு, மாணவர்கள் தங்கள் உயர்க்கல்வியைத் தொடரும்போது, அவர்களுக்குப் பயனாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.