பாஸுக்கு வாக்களிப்பது பிஎன்னுக்கு வாக்களிப்பதற்கு ஒப்பாகும்- மகாதிர்

dr mடாக்டர்    மகாதிர்    முகம்மட்,    பாஸுக்கு  அளிக்கப்படும்   வாக்கு  பிஎன்னுக்கு   அளிப்பதாகும்   என்பதுடன்   அது   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்  நிர்வாகத்தின்   அத்துமீறல்களுக்குத்   துணைபோவதாகவும்   ஆகும்   என்றார்.

“தீயவர்கள்   செய்யும்   பாவங்கள்  அவர்களை   ஆதரிப்போரையும்   வந்து   சேரும்.

“எனவே  பாஸ்   தலைவர்களும்  உறுப்பினர்களும்   திருந்த   வேண்டும்”,  என்று  பக்கத்தான்  ஹரபான்    நிர்வாகத்தலைவர்  இன்று  மாலை   ஒரு   பதிவில்   கேட்டுக்கொண்டார்.

பாஸுக்கு  இனமோ,  சமயமோ,  நாடோ,  அல்லது  நஜிப்பின்  அரசாங்கத்தை   அகற்றுவதோ  முக்கியமல்ல  என்று  மகாதிர்  அவரது   பதிவில்   கூறினார்.

“பாஸுக்கு   அமனா  மற்றும்   டிஏபி-இன்  பகைதான்  முக்கியம். பாஸுக்கு   வேறு   எதையும்விட    அதன்  கட்சியே   முக்கியம்.

“பாஸ்   (தேர்தலில்)  போட்டியிட   வேண்டும்,  வெற்றி  தோல்வி   பற்றி  அது  கவலைப்படவில்லை”,  என்றார்.

பாஸுக்கு  ஹரபானுடன்  ஒத்துழைக்க   விரும்பவில்லை.  ஏனென்றால்  அதன்   நோக்கம்   பல-முனை  போட்டிகளில்   பிஎன்னுக்கு  வெற்றியைப்  பெற்றுத்தருவதுதான்   என்றார்  மகாதிர்.

“அவர்களைப்  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்குக்கு    எதிரான    கூட்டணியில்    சேர   அழைத்தோம்.  ஆனால்,  பாஸ்,  ஹரபானுக்கு   வாக்குகள்   குறைந்துபோவதற்கு   வழிவகுக்கும்   நிபந்தனைகளை   விதித்தது.

“பாஸின்  நிபந்தனைகள்    பிஎன்  வெற்றி  வழிகோலும்  வகையில்   இருந்தன”,  என்று  மகாதிர்   கூறினார்.

“ஒன்று  மட்டும்   நிச்சயம்,  பாஸ்   பிஎன்னுக்கு   எதிராகவும்  ஹரபானுக்கு   எதிராகவும்   போட்டியிட்டால்,   மலாய்   வாக்குகள்  மூன்றாக  பிரியும் .  பாஸ்  ஒரு  பலமான     கட்சி   அல்ல    என்றாலுங்கூட   ஹரபான்  வாக்குகள்  குறையும்”.

மும்முனை  போட்டி   என்பது   பிஎன்  வெற்றிக்குத்தான்   வழிகோலும்   என்றார்  மகாதிர்.