சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் – ஹலிமா யாக்கோப்

1ஹலிமாஎதிர்வரும் புதன்கிழமை, சிங்கப்பூரின் புதிய அதிபராக ஹலிமா யாக்கோப் பதவி ஏற்கவுள்ளார்.

ஹலிமா யாக்கோப், சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற சபா நாயகராக இருந்தவர்.

அதிபர் தேர்தல் குழு (பி.ஈ.சி.), அதிபர் பதவிக்கு வந்த ஐந்து விண்ணப்பதாரர்களில், ஒருவருக்கு மட்டுமே தகுதி சான்றிதழ் வழங்கியதாக, சிங்கப்பூர் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஒருவர் ஹலிமா ஆவார்.

ஆக, இம்முறை அதிபர் தேர்தல் நடைபெறாது. செப்டம்பர் 13-ல், அதிபர் தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றபின், ஹலிமா அதிபராக அறிவிக்கப்படுவார்.

இம்முறை, அதிபர் பதவி மலாய் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

கடந்தாண்டு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் இப்பரிந்துரையை முன்வைத்தார். அதிபர் பதவியில் பன்முகப் பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்ய இது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், அக்குடியரசின் முதல் அதிபராக ஜோசப் இஷாக் (1965 – 1970) இருந்தார். அக்காலகட்டத்தில், அவரின் முகம் சிங்கப்பூர் டாலர் நோட்டுகளை அலங்கரித்தது.

ஜோசப் இஷாக் அவர்களுக்குப் பின்னர், இரண்டாவது மலாய்க்காரராக ஹலிமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹலிமாவின் தந்தை இந்தியராவார்.

தங்களுக்கு வந்த 5 விண்ணப்பங்களில், 3 மலாய்க்காரர்களிடமிருந்து வந்ததாகப் பி.ஈ.சி. தெரிவித்தது.

அம்மூவரில், ஹலிமா ஒருவருக்கு மட்டுமே தகுதி சான்றிதழ் வழங்கியதாக பி.ஈ.சி. மேலும் கூறியது.

கடந்த 1993 முதல் நடைமுறையில் இருக்கும் இந்த அதிபர் பதவிக்கு, பிரதமர் பதவியைப் போல் அரசியல் அதிகாரம் ஏதுமில்லை, அப்பதவி ஓர் அடையாளம் மட்டுமே. இருப்பினும், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குக் கடுமையான விதிமுறைகளும் தகுதி ஆய்வுகளும் உண்டு.

ஹலிமா யாக்கோப்  அக்குடியரசின் முதல் பெண் அதிபர்  என்பதும்  குறிப்பிடத்தக்கது.