யுஎன்எச்ஆர்சி-இல் இடம்பெற மலேசியாவுக்கு ‘முற்றிலும் தகுதியில்லை’- மனித உரிமை அமைப்புகள்

unமனித  உரிமை  அமைப்புகள்,  ஐநாவின்  மனித  உரிமை   மன்றத்தில்   இடம்பெற   மலேசியாவுக்குத்   தகுதியில்லை   என்று   கூறியுள்ளன.

2018- 2020  தவணைக்கு   யுஎன்எச்ஆர்சி-இல்  இடம்பெற    மலேசியா   போட்டியிடும்   என   அறிவிக்கப்பட்டிருப்பதை   அடுத்து   யுகே-இலிருந்து   செயல்படும்  Article 19உம்  சுவாரா  ரக்யாட்  மலேசியா(சுவாராம்)வும்   அதில்   இடம்பெறுவதற்குமுன்  மலேசியா   பேச்சுரிமைக்கெதிரான   அடக்குமுறையைக்  கைவிட   வேண்டும்    என்று   கேட்டுக்கொண்டன.

“மனித  உரிமைகள்   விவகாரத்தில்   மலேசியா  இதுவரை   செய்துள்ள  செயல்களால்   அது  ஐநா  மனித  உரிமை   மன்றத்தில்   உறுப்பியம்  பெறும்  தகுதியை  முற்றிலும்   இழப்பதாக Article19-உம்  சுவாராமும்  கருதுகின்றன”,  என்று  அவ்விரு  அமைப்புகளும்   ஓர்  அறிக்கையில்   கூறியுள்ளன.

மலேசியா  பேச்சுரிமை,  ஒன்றுகூடும்  உரிமை,   அமைதிப்பேரணி  நடத்தும்  உரிமை   ஆகியவற்றுக்கு   எதிராக  மோசமாக   நடந்து   கொண்டிருப்பதாகவும்   அந்த   ஐநா  அமைப்பில்   இடம்பெற  விரும்பினால்   அது  உடனடியாக  சில  சட்டச்  சீரமைப்புகளை  செய்தாக    வேண்டும்   அந்த   அறிக்கை  கூறிற்று.

யுஎன்எச்ஆர்சி  என்பது   ஐநா  உறுப்பு   நாடுகளால்   அமைக்கப்பட்ட  ஓர்  அமைப்பு.    உறுப்பு  நாடுகளில்    மனித   உரிமைகளை   மேம்படுத்தவும்   பாதுகாக்கவும்   அதன்  பொறுப்பாகும்.

அந்த  அமைப்பில்     காலியாகவுள்ள   நான்கு  இடங்களுக்கு   2017  அக்டோபரில்   தேர்தல்   நடைபெறுகிறது.  அந்த   நான்கு   இடங்களுக்கு   ஆசிய- பசிபிக்  மண்டலத்தில்  மலேசியா  உள்பட   ஐந்து   நாடுகள்   போட்டியிடுகின்றன.