ஒரே மலேசியா மிளகாய் சாற்றில் “அளவுக்கு அதிகமாக கனரக உலோகங்கள்”

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா மிளகாய்ச் சாறு மீது நடத்தப்பட்ட ஆய்வுக் கூடப் பரிசோதனைகள் அதில் உள்ள பாதரச, காரீய அளவுகள் 1985ம் ஆண்டுக்கான உணவுப் பொருள் விதிமுறைகள் அனுமதித்துள்ள வரம்பைக் காட்டிலும் அதிகமாக இருப்பதைக் காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மலேசிய தரங்களைப் பயன்படுத்துவோர் சங்கம் மேற்கொண்ட பொருள் ஒப்பீட்டு ஆய்வின் நகல் அறிக்கை அவ்வாறு தெரிவிக்கிறது.

அந்த மிளகாய் சாறுவில் 3.64ppm காரீயமும் 0.08ppm பாதரசமும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அது கூறிக் கொண்டது.

மிளகாய் சாற்றில் 2ppm காரீயமும்  0.05ppm பாதரசமும் அனுமதிக்கப்பட்ட அளவுகளாகும்.

தெஸ்கோ வால்யூ, லைப், லிங்கம் ஆகிய இதர மூன்று மாதிரிகள் அந்தப் பொருளை ஒப்பீடு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.

தர நிர்ணயத் துறை ஆய்வுக் கூட அங்கீகாரத் திட்டத்தின் கீழ் அங்கீகாரம் வழங்கியுள்ள யூனிபெக் சென் பெர்ஹாட் (Unipeq Sdn Bhd) பரிசோதனைகளை நடத்தியது.

மலேசிய தரங்களைப் பயன்படுத்துவோர் சங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக அத்தகைய ஆய்வுகளை நடத்தி வருகிறது என்றும் ஒரே மலேசியா பொருட்களை வாங்குமாறு பயனீட்டாளர்களுக்கு ஊக்கமூட்டப்படுவதால் அவற்றையும் ஆய்வில் இணைத்துக் கொள்ள சங்கம் முடிவு செய்ததாக அதன் தலைமை நிர்வாகி டிஎன் ரத்னா கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மளிகைக் கடைகளிலும் பேரங்காடிகளிலும் ஆகஸ்ட் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் அந்தப் பொருட்கள் பெறப்பட்டன.

அந்த முடிவுகள் பற்றிக் கருத்துரைத்த ரத்னா, ஒரே மலேசியா மிளகாய் சாறு-களை விற்பதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சைக் கேட்டுக் கொண்டார்.

“இது கனரக உலோகங்கள் சம்பந்தப்பட்டதாகும். ஆகவே தனது சொந்த சோதனைகள் மூலம் எங்கள் முடிவுகளை உறுதி செய்யும் வரையில் அதன் விற்பனையை அமைச்சு நிறுத்தி வைக்க வேண்டும். அடுத்து அமைச்சு நடவடிக்கை எடுக்கலாம்,” என்றார் அவர்.

“கனரக உலோகங்களின் விளைவுகள் நச்சுத் தன்மை கொண்டவை. அந்தப் பொருளை ஒருவர் நீண்ட காலத்துக்கு உட்கொண்டால் அது அவருடைய முடியிலும் தசைகளிலும் உடம்பின் மற்ற பாகங்களிலும் ஒன்று சேரும். அந்த நபருடைய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் விளைவுகள் விரைவாகத் தெரிய வரும்.”

அளவுக்கு அதிகமான பாதரசம் மத்திய நரம்பியல் முறையையும்  endocrine முறையையும் பாதிக்கும் அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படும் சாத்தியமும் உண்டு என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

காரீய அளவு அதிகமாகும் போது குறுகிய கால அளவில் வாந்தியையும் வயிற்றுப் போக்கையும் கொண்டு வரக்கூடும். “சிறிய அளவை தொடர்ச்சியாக உட்கொண்டால் கூட அது பாதகமான விளைவுகளை குறிப்பாக சிசுக்களுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் ஏற்படுத்தக் கூடும்.”

அந்த மிளகாய் சாற்றில் எப்படி அதிக அளவு உலோகம் கலந்தது என்பதை தமது அமைப்பு இன்னும் ஆராய்ந்து வருவதாகவும் ரத்னா சொன்னார்.

“அதில் கலந்ததற்கு இரண்டு ஆதாரங்கள் இருக்கலாம். முதலாவது மண்ணிலிருந்து வந்திருக்கலாம். இரண்டாவது பூச்சிக் கொல்லி மருந்துகளிலிருந்து வந்திருக்கலாம். மாற்றப்படும் போது மற்ற காய்கறிகளிலிருந்தும் அது கலந்திருக்கலாம்,” என்றார் அவர்.

TAGS: