‘ஜனநாயக செயற்கட்சி (டிஏபி) மற்றும் அமானா- உடனான உறவை முறித்துகொண்டால், பாஸ் பிகேஆர்-உடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது’, எனும் பாஸின் நிபந்தனை, அந்த இஸ்லாமியக் கட்சி அரசியல் ஒத்துழைப்பை மீண்டும் நிலைநாட்ட விரும்புகிறது என்பதனை நிரூபிக்கிறது என பிகேஆர் மத்திய நிர்வாகக் குழுவின் உறுப்பினர், எலிசபெத் வோங் கூறியுள்ளார்.
“அவர்கள் அப்படி பேச தொடங்கியிருப்பது, சுவாரசியமானது எனக் கருதுகிறேன். அவர்கள் இன்னும் ஒரு வாய்ப்பு (பிகேஆர் உடன் பேச) இருக்கும் என நினைக்கிறார்கள்,” என்று எலிசபெத் வொங் கூறினார்.
அண்மையில், பாஸ் இளைஞர் துணைத் தலைவர் அஹ்மத் ஃபாட்லி ஷாரி , டிஏபி -யின் தலைமையில் இயங்கும் (பாஸின் கூற்றுபடி) பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலிருந்து பிகேஆர் விலகினால், பாஸ்-உடனான பேச்சுவார்த்தைகளின் கதவுகள் திறக்கலாம் அல்லது அரசியல் ஒத்துழைப்பு பெறலாம் என்று கூறியிருந்தார்.
பாஸ்- டிஏபி உடனான கருத்து வேறுபாடுகளினால், பாஸ் பக்காத்தான் ரக்யாட்டிலிருந்து விலகியது. அதனைத் தொடர்ந்து, பிகேஆர், டிஏபி, அமானா மற்றும் பெர்சத்து கூட்டணியுடன் பக்காத்தான் ஹராப்பான் உருவானது.
கடந்த மே மாதத்தில், அரசியல் ஒத்துழைப்புக்கான விதிமுறைகளை, பிகேஆர் மீறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, பாஸ் பிகேஆர்-உடனான ஒத்துழைப்பை முறித்துகொண்டது.
அம்னோ மற்றும் பாரிசன் நேஷனல் ஆட்சியைக் கவிழ்க்க எண்ணம் கொண்டிருக்கும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் விவாதிக்க, பிகேஆர் தயாராக உள்ளது என்று எலிசபெத் கூறினார்.
இருப்பினும், பாஸ் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ள மறுத்துவிட்டதால், பிகேஆர் மும்முனை போட்டிக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சமீபத்தில், பாஸ்- உடன் பேச்சுவார்த்தை நடத்த, பிகேஆர் கட்சியின் அரசியல் செயலகம் முடிவு செய்ததால், அக்கட்சி தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது அறிந்ததே.
இதற்கிடையே, சிலாங்கூர் பாஸ் துணை ஆணையாளர் அஹ்மாட் யூனுஸ் ஹைரி, பிகேஆர்- உடனான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவரச் சொல்லி, மத்தியத்திலிருந்து எந்தவொரு அறிவுறுத்தலும் வரவில்லை என, கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
பி கே ஆர் கட்சியும், பாஸ் கட்சிபோல் ஆகிவிட்டது ! ஒன்றும் நம்புவதற்கில்லை !