கிளந்தான் அம்னோ செப்டம்பர் மாதம் தேர்தல் வெள்ளோட்டத்தை நடத்துகிறது

கிளந்தான் அம்னோ, தேர்தலுக்கான வெள்ளோட்டத்தை செப்டம்பர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தும் என அதன் தலைவர் முஸ்தாப்பா முகமட் அறிவித்துள்ளார்.

தற்போது கிளைத் தலைவர்களுக்கு அந்தத் தேர்தல் வெள்ளோட்டத்தை ஒட்டி கட்டம் கட்டமாக விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

“அம்னோ உறுப்பினர்களிடையே உணர்வுகள் மேலோங்கி வருவதை நான் காண்கிறேன். ஆகவே அந்த வெள்ளோட்டத்துக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என நான் கருதுகிறேன்.”

அவர் இன்று கோத்தாபாருவில் உள்ள கெத்தெரே நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு நன்கொடைகளை வழங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறினார்.

பொதுத் தேர்தலுக்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு வெள்ளோட்டத்தை நடத்துமாறு கடந்த மே மாதம் 27ம் தேதி அம்னோ உச்ச மன்றம் முடிவு செய்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமையகம் வெளியிட்ட உத்தரவுக்கு இணங்க தேர்தல் வெள்ளோட்டம் நடத்தப்படுவதாக முஸ்தாப்பா சொன்னார்.

பிஎன் வேட்பாளர்களில் இளைஞர்கள்

வரும் பொதுத் தேர்தலில் கிளந்தானில் போட்டியிடுவதற்கு பிஎன் நிறுத்தும் வேட்பாளர்களில் “இளம் மக்களும்” இருப்பார்கள் என அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு கூடுதல் மதிப்பாக புது முகங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பொதுவாக இளைஞர்கள் இளம் வாக்காளர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் புரிந்து கொண்டுள்ளனர். ஆகவே தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இளைஞர்களும் இருப்பதும் அவசியமாகும்.”

கிளந்தானில் பிஎன் வேட்பாளர்களில் அரசு சாரா அமைப்புக்கள், அரசாங்க அமைப்புக்கள் ஆகியவற்றின்  உறுப்பினர்களும் ஒய்வு பெற்றவர்களும் சமயப் பிரமுகர்களும் கல்வியாளர்களும் இடம் பெறுவர் என அவர் எதிர்பார்க்கிறார்.

பெர்னாமா