சமயப்பள்ளிகள் அங்குள்ள சிறார்களுக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கத் தவறும்போது அப்பள்ளிகளின் நிறுவனர்களும் முதல்வர்களுமே அதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று ஜி-25 கூறியது.
மலாய்ச் சான்றோர்களைக் கொண்ட அந்த அமைப்பு, அப்பள்ளிகள் நடத்தப்படும் விதம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதற்குச் சமய அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்றும் மாறாக, அவர்கள் நேற்றைய தீ விபத்தை விசாரிக்க துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி பரிந்துரைத்துள்ள சிறப்புக்குழுவை அமைக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
நேற்று, கோலாலும்பூர் ஜாலான் கிராமாட் ஊஜோங்கில் உள்ள சமயப் பள்ளியில் மூண்ட தீயில் 23 பேர் பலியானார்கள்.
அதனைத் தொடர்ந்து ஜாஹிட், அந்த அதிகாலை தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அதற்குத் தாமே தலமையேற்கப் போவதாகவும் தெரிவித்தார்.