தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பக்கத்தான் ஹரபான் பாஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்று சிறையில் உள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியிருப்பது குறித்து அவரிடமே விளக்கம் கேட்பது நல்லது என்கிறார் பிகேஆர் எம்பி வில்லியம் லியோங்.
அது, பாஸுடன் பேச்சுகள் இனி இல்லை என்று பக்கத்தான் ஹரபான் செய்துள்ள முடிவுடன் முரண்படும் அன்வாரின் கடிதத்தால் எழுந்துள்ள சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.
“(ஹரபானும் அன்வாரும் எடுத்த) முடிவுகள் முரண்படுவதாகத் தோன்றுகின்றது. இதன் தொடர்பில் ஹரபான் தலைவர் மன்றம் பிகேஆரிடம் விளக்கம் பெற விரும்பலாம்”, என பிகேஆர் உச்சமன்ற உறுப்பினரான லியோங் கூறினார்.
இவ்விசயத்தில் ஒரு கட்சி (அன்வார்) முடிவைவிட ஹராபான் முடிவு மேலானது. ஆனாலும், கலந்து பேசுவது நல்லது. ஏனென்றால், ஹரபான் ஒருமித்த முடிவின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.
பிகேஆர் அதன் அடிநிலை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்வது அவசியம் என்று லியோங் கூறினார். அவர்கள் பாஸுடன் பேச்சுகளை நிறுத்துவதுதான் நல்லது என்று நினைப்பதாக ஊடகங்கள் செய்த கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன என்றாரவர்.
“பிகேஆர், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிதல் முக்கியம். அதை இன்றே தெரிந்துகொள்வது நல்லது இல்லையேல் வாக்களிப்பு நாளின்போது ஏமாந்துபோக நேரும்.
“மக்கள் அதிருப்தி அடைந்தால், ஒன்று அவர்கள் (ஹரபானுக்கு) எதிராக வாக்களிப்பார்கள் அல்லது வாக்களிக்கவே வர மாட்டார்கள்”, என்றாரவர்.