சமயப்பள்ளியில் தீ: என்ன, கடவுள் சித்தமா?, சீறினார் சித்தி ஹஸ்மா

 

Sitiangryகோலாலம்பூர், டத்தோ கிராமாட்டில் டாருல் கொரான் இட்டிஃபாகியா தாபிஸ் பள்ளியில் ஏற்பட்ட தீயில் 21 சிறுவர்கள் மாண்டனர். அச்சம்பவத்திற்கு பொறுப்பானர்கள் தங்ககளுடை பொறுப்பை தட்டிக்கழிப்பது பற்றி டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி அவரது பெரும் ஏமாற்றத்தை கண்ணீர் சிந்தியவாறே தெரிவித்தார்.

“இது கடவுள் சித்தம் என்று கூறி இதற்குப் பொறுப்பானவர்கள் தப்பிப்பது பற்றி நான் கோபப்படுகிறேன்.

“(அவர்கள் கூறுகிறார்கள்) இச்சிறுவர்கள் சமயத் தியாகிகளாக மாண்டனர் என்று…ஆனால், இது முறையல்ல.

“பெற்றோர்கள் மீது பரிதாப்படலாம், அவர்களுக்கு பணம் கொடுக்கலாம்…அப்பெற்றொர்கள் அவர்களுடைய குழந்தைகளை திரும்பப்பெற மாட்டார்கள்”, என்று சித்தி ஹஸ்மா கண்ணீரை துடைத்துக்கொள்வதற்கு முன்னர் கூறினார்.

முன்னாள் பிரதமர் மகாதிரின் துணைவியரான சித்தி ஹஸ்மா, அப்பள்ளிக்கு வந்த ஒரு பெண்ணுடன் பேசினார்.

வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீயில் அப்பள்ளியின் மாணவர்களில் குறைந்தபட்சம் 21 பேரும் இரண்டு வார்டன்களும் மாண்டனர்.

அந்தக் கட்டடத்தில் வகுப்புகள் நடத்துவதற்கு அப்பள்ளிக்கு அனுமதி இல்லை, தீ பாதுகாப்பு மற்றும் பயன்படுத்துவதற்கான அனுமதி எதுவும் கிடையாது.

அப்பள்ளியின் தலைமையாசிரியர் முகம்மட் ஸாகிட் மாமுட், சமயக் கல்வி பயில்வதற்காக அவர்களுடைய குடும்பத்திரை தியாகம் செய்து விட்டு வந்த அம்மாணவர்கள் சமயத்திற்காக உயிர் துறந்தனர் என்று கூறினார்.

பொறுப்பைத் தட்டிக்கழித்து எல்லாம் கடவுளைப் பொறுத்தது என்று கூறுவது பாவச் செயலாகும் என்று சித்தி ஹஸ்மா கூறினார்.

“நல்லது கடவுளிடமிருந்து வருகிறது என்று நாம் கூறுகிறோம், மற்ற கெட்டது நமது சொந்தப் பொறுப்பு ஆகும்.

“ஆனால் இப்போது, கெட்டது கடவுளின் சித்தம் என்று அவர்கள் கூறுகின்றனர், இது அவர்களின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் முயற்சியாகும்”, என்று அவர் மேலும் கூறினார்.

இந்தப் பேரிடர் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணை முழுமையானதாக இருக்க வேண்டும், மற்றப்பள்ளிகளுக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.