ஆட்சியிலிருக்கும் மலாய்க்காரர் கட்சியான அம்னோவை அடுத்தப் பொதுத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று தீவிரமாகச் செயல்படுகிறார் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது. பெர்சத்து வட்டாரங்களின் தகவல்படி மகாதிரை களமிறக்க வேண்டும். அவர் வழி நாடாளுமன்றத்தில் அதிகமான இருக்கைகளைப் பெற முடியும் என்ற கருத்து வெளியாகியுள்ளது.
வயதின் காரணமாக தேர்தலில் பேட்டியிடுவதற்கு மகாதிர் விருப்பமில்லாதவராக இருக்கிறார். ஆனால், பக்கத்தான் ஹரப்பானால் கட்டாயப்படுத்தப்பட்டால் அவர் போட்டியில் இறங்குவார்.
எங்கு போட்டியிட விரும்புகிறீர்கள் என்ற வினாவிற்கு பதில் அளித்த மகாதிர், “நான் பெர்சத்து லங்காவி கிளையின் தலைவராக இருக்கிறேன். நான் அங்கே போகலாம் அல்லது நான் புத்ரா ஜெயாவிற்கு போகலாம். இந்த இரண்டிலும் முடியும்”, என்று அவர் மலேசியாகினியுடனான தனிப்பட்ட நேர்காணலில் நேற்று கூறினார்.
இவ்விரண்டு இடங்களுடன் மகாதிருக்கு நெருங்கிய உறவு உண்டு. அவர் லங்காவியை சுற்றுலாப் பயணிகளைப் பெருமளவு கவரும் இடமாக்கினார். புத்ரா ஜெயாவை நாட்டின் நிருவாக மையமாக்குவதில் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.
தற்போது அவ்விரு இருக்கைகளும் பாரிசான் வசம் இருக்கின்றன.