சரவாக்கில், பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த ஓர் இரவு விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற கோலா செபெதாங் சட்டமன்ற உறுப்பினர், சுவா யீ லின் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
மிரி, ஈஸ்ட்வூட் வேலி கோல்ப் & கன்ட்ரி கிளப்பில் நடந்த அந்நிகழ்வில், குடிநுழைவுத் துறை மற்றும் போலிஸ் அதிகாரிகள் நுழைந்து, யீ லின்னை வெளியேற்றினர். இச்செய்தி, சுவா-வின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
சம்பவத்தின் போது, மிகவும் நிதானத்துடன் காணப்பட்ட சுவா, “நீங்கள் உங்கள் பணியைச் செய்கின்றீர்கள், ஆனால், ஏன் என்று எனக்கு புரியவில்லை,” என்று குடிநுழைவுத் துறை அதிகாரியிடம் கேட்டார்.
இரவு 9 மணியளவில், தான் தீபகற்ப மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, சுவா மலேசியா கீனியிடம் தெரிவித்தார்.
முன்னதாக, அதே இரவு விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற, பிகேஆரை சேர்ந்த 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஷுரைடா கமாருடின் (அம்பாங்), ஹீ லோய் சியான் (தென் பெட்டாலிங் ஜெயா) இருவரும், மிரி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், சரவாக்கினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.
இச்சம்பவம், பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் சரவாக் சென்றடைந்த மறுநாள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாதீர் எதிர்க்கட்சியில் இணைந்த பிறகு, சரவாக்கிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில், சரவாக் மக்களுக்கான ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, கூச்சிங்கில் ஒரு கூட்டத்தில் மகாதீர் பேசவுள்ளார்.
ஜசெக-வின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் மற்றும் அமானாவின் தேர்தல் இயக்குநர் டாக்டர் ஹாத்தா ரம்லி ஆகிய இருவரும் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சரவாக் முதலமைச்சர், அபாங் ஜொஹாரி துன் அபாங் ஓபேங், மகாதீர், லிம் மற்றும் ஹாத்தா ஆகியோர் மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று, இன்று மாலை உறுதி அளித்துள்ளார்.
இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே– நான்தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே.