டிஎபி வேட்பாளர்கள் கிளந்தானில் போட்டியிடுவர்

 

dapinkelantanஅடுத்த பொதுத் தேர்தலில் டிஎபி கிளந்தான் மாநிலத்தில் அதன் வேட்பாளர்களை களமிறக்கக்கூடும். கடந்த 31 ஆண்டுகளில் இது முதல்தடவையாக இருக்கும்.

டிஎபி அதன் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கிளந்தான் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் வான் அப்துல் ரஹிம் வான் அப்துல்லா தெரிவித்தார்.

காலாஸ் மற்றும் கோத்தா லாமா தொகுதிகள்மீது டிஎபி கண்வைத்துள்ளதாக வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளன.

ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காலாஸ் தொகுதிக்கு, குவா மூசாங்கிற்கு அருகிலுள்ள தொகுதி, ஏற்றவர் என்று டிஎபி கருதுகிறது.

ஓராங் அஸ்லிக்கு அரசாங்கத்தில் பங்கேற்க வாய்ப்பு அளிப்பதற்கான எங்களுடைய அனுகுமுறை இது, அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றால், என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

கோத்தா லாமா தொகுதியில் சீன வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். 30,000 வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சீனர்களாவர். ஆனால், அத்தொகுதி பாஸின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1999 ஆம் ஆண்டிலிருந்து அத்தொகுதியை அனுவார் டான் அப்துல்லா தன்வசம் வைத்துள்ளார்.

மசீச வேட்பாளரை அனுவார் டான் எப்போதும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். ஒரே ஒரு தடவை மட்டும், 2004 பொதுத் தேர்தலில், அவர் வெறும் 34 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இது சம்பந்தமான பேச்சுவார்த்தை இன்னும் நடந்துகொண்டிருப்பதாக வான் அப்துல் ரஹிம் கூறினார்.

கிளந்தான் மற்றும் திரங்கானு டிஎபி ஒருங்கிணைப்பாளர் லி சின் சென் டிஎபி இரு தொகுதிகளில் போட்டியிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது உறுதிப்படுத்தினார்.