பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரை அவமதித்த குற்றச்சாட்டிலிருந்து மலேசிய குற்றச்செயல் கண்காணிப்பு அமைப்பு (மைவாட்ச்)த் தலைவர் ஆர்.சஞ்சீவனை விடுவித்தது.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முகம்மட் மொக்சானி மொக்தார் அவரை விடுவித்தார் என சஞ்சீவனின் வழக்குரைஞர் எஸ்.பிரகாஷ் கூறினார்.
“சஞ்சீவன் முகநூலில் ‘காலிட், நீங்கள் என்ன முட்டாளா?’ என்று பதிவிட்டிருந்ததாக அரசுத்தரப்பு குற்றம் சாட்டியது. ஆனால், அது அந்த முகநூல் பக்கம் சஞ்சீவனுடையதுதான் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது.
“அதனால், நீதிமன்றம் அவரை விடுவித்தது”, என பிரகாஷ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இதனிடையே, சஞ்சீவன் தன் வாயைக் கட்டிப்போட “வழக்கத்துக்கு மாறான” குற்றச்சாட்டுகள் எல்லாம் சுமத்தப்படுவதாகக் கூறினார்.
“எப்படியோ, நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைத்து விட்டது. மகிழ்ச்சியாக இருக்கிறது”, என்றார்.