இன்று காலை, சிலாங்கூர் பெட்டாலிங் நில அலுவலகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காவல் துறையினரின் உதவியுடன், சுபாங் விமான நிலைய பள்ளிவாசலின் முன்னாள் பணியாளர்கள் இருவரின் குவாட்ரஸ் வீடுகளை இடித்துத் தள்ள முற்பட்டனர்.
தனியார் நிறுவனமான, மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.எ.எச்.பி.) அந்நிலத்தை மேம்பாட்டுப் பணிகளுக்காக எடுத்துக்கொண்டதன் காரணமாக, அந்த இருவரின் வீடுகளும் இன்று இடித்துத் தள்ளப்படும் நிலைக்கு வந்துள்ளது.
அதனால், அப்துல் ரஷாக் சைட் மற்றும் யாக்கோப் அப்துல் இருவரும் மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியப் பொதுச் செயலாளர் ஆ. சிவராஜனின் உதவியுடன், இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி தலையிட வேண்டுமென கோரி, ஒரு மனுவைச் சமர்ப்பித்துள்ளனர்.
“சுபாங் விமான நிலையப் பள்ளிவாசலின் முன்னாள் பணியாளர்களான இவர்கள் இருவரும், கடந்த 20 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். முறையான அனுமதி ஏதுமின்றி இவர்கள் இங்கு தங்கியிருப்பதாக கூறி, எந்தவொரு கலந்தாலோசிப்பும் இல்லாமல், இவர்களை இங்கிருந்து விரட்டுவது நியாயமில்லை,” என சிவராஜன் தெரிவித்தார்.
“மத்திய அரசுக்குச் சொந்தமான இந்நிலம், எம்.எ.எச்.பி.-க்கு லெவிக்கு விடப்பட்டுள்ளது. எனவே, சிலாங்கூர் மந்திரி பெசார் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டுமென, இன்று நாங்கள் அவருக்கு மனு கொடுத்துள்ளோம்,” என்று சிவராஜன் கூறினார்.
“மாநில அரசின் கீழ் இயங்கும் பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகம், ஒரு தனியார் நிறுவனத்தின் உத்தரவின் பேரில், அவர்களின் வீட்டை இடிக்க முற்பட்டிருப்பது எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது,” என அவர் மேலும் கூறினார்.
இதுவரை எம்.ஏ.சி.சி. பாதிக்கப்பட்ட இருவரிடமும் கலந்துபேசவில்லை, எந்தவொரு நஷ்ட ஈடும் கொடுப்பதாகத் தெரிவிக்கவில்லை என சிவராஜன் கூறினார்.
“எனவே, இவ்விவகாரத்தில் எம்.பி. தலையிட வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். வீட்டை உடைப்பதை நிறுத்த உத்தரவிடுவதோடு, இப்பிரச்சனைக்குச் சுமூகமான முறையில் தீர்வுகாண எம்.எச்.சி.சி.-ஐ வலியுறுத்த வேண்டும்,” என்றார் சிவராஜன்.
இதற்கிடையே, தங்கள் இரு குடும்பங்களும் இவ்வாறு நடத்தப்படுவது நியாயமல்ல என்று அப்துல் ரஷாக் தெரிவித்தார்.
முன்னதாக 2009-ல், இதேபோன்று, பள்ளிவாசலின் உறுப்பினர்கள் இருவரின் வீடுகள் உடைக்கப்பட்டபோது, எம்.எச்.சி.சி. அவர்களுக்கு ரிம100,000 நஷ்ட ஈடு கொடுத்தது என்றார் ரஷாக்.
“நாங்கள் எம்.எச்.சி.சி.-யுடன் முறையாக கலந்துரையாட விரும்புகிறோம். நல்லமுறையில் பேசி, இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்போம். சட்ட விரோதமாக நாங்கள் இந்நிலத்தில் தங்கியிருக்கிறோம் எனக்கூறி, நீங்கள் எங்களை வெறுமனே துரத்தியடிக்க முடியாது,” என்று ரஷாக் மேலும் கூறினார்.
“நாங்கள் இங்கு 20 வருடங்களாக வாழ்கிறோம். சில மேம்பாட்டுத் திட்டங்களால், இன்று நாங்கள் சட்டவிரோத குடியேறிகள் ஆகிவிட்டோமா? பிறகு எதற்காக 2009-ல், அந்த இரண்டு குடும்பங்களுக்கு ரிம 100,000 இழப்பீட்டை எம்.எச்.சி.சி. வழங்கியது,” என்றும் ரஷாக் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, இன்று உடைபடவிருந்த வீடுகள், பி.எஸ்.எம்.-மின் தலையீட்டால், அடுத்த ஞாயிறு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களுக்குக் குறைந்தது 2 மாதங்களாவது கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென பி.எஸ்.எம். கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அவர்களுக்கு நல்லதொரு வீடு அல்லது நஷ்டஈடு மற்றும் வருவாய் இழப்புக்கான நஷ்டஈடு அனைத்தும் முறையாக வழங்கப்பட வேண்டுமெனவும் பி.எஸ்.எம். வலியுறுத்தியுள்ளது.