கடந்த ஜூன் மாதம், நாட்டை உலுக்கிய நவீனின் கொலை வழக்கு, நாளை ஜோர்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நவீன் குடும்பத்தின் சார்பில், சட்ட விவகாரங்களை மேற்பார்வையிடும் வழக்குரைஞர், பல்ஜித் சிங், பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை எனக் கூறினார்.
“இவ்வழக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கு தொடர்பான ஒவ்வொரு விவரமும் முக்கியமானது,” என மலேசியகினியிடம் அவர் தெரிவித்துள்ளார்.
நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளும் கவனமாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
“விசாரணையைத் தொடர, மரணப் பரிசோதனை அறிக்கையை, முடிந்தவரை சீக்கிரம் வழங்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.
ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஜூன் 10-ல் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நவின், சிகிச்சை பலனளிக்காமல் ஜூன் 15-ஆம் தேதி மரணமடைந்தார்.