பக்கத்தான் ஹரபான் சொற்ப வாக்குகளில் வென்ற இடங்களை மீண்டும் கைப்பற்ற உதவுவதாக உறுதிகூறிய நியுஜென் கட்சி, அதற்காக நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தப்போகிறது.
எந்தெந்த இடங்களில் ஹரபான் சொற்ப வாக்குளில் வெற்றி பெற்றதோ அந்த இடங்களில் செராமாக்கள் நடத்தி அங்குள்ள சிறுபான்மை மக்களிடம் ஹரபானுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தப்போவதாக நியுஜென் கட்சியின் துணைத் தலைவர் பிரான்சிஸ் ராஜா கூறினார்.
“நவம்பர் முதல் நாள் தொடங்கி கோலசிலாங்கூர், சுங்கை பட்டானி, தெலோக் இந்தான், பெந்தோங், தெப்ராவ் முதலிய இடங்களுக்குச் செல்வோம்.
“அங்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதுடன் 14வது பொதுத் தேர்தலுக்கு வாக்காளர்களைப் பதிவு செய்யும் வேலையும் நடக்கும். அக்கூட்டங்களின்வழி 100,000 உறுப்பினர்வரை சேர்க்க விரும்புகிறோம்” என்று கூறிய அவர், அக்கட்சியின் இப்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 2000 என்றார்.
அக்கட்சிக்கு சாபா, சரவாக் செல்லும் திட்டமும் உண்டு. மேலும், அது கட்சியின் பெயரை மைனாரிடி ரைட்ஸ் எக்சன் பார்டி (மிரா) என மாற்றுவதற்கு மனுச் செய்திருப்பதாகவும் ராஜா கூறினார்.
இதனிடயே, நியுஜென் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை அறிக்கையாக தயாரிக்க 100 என்ஜிஓ-கள் ஒன்றுகூடி விவாதிக்கும் Malaysian Minorities National Agenda (Minda@2040) மாநாட்டிலும் கலந்துகொள்ளும்.
அக்கோரிக்கைகள் பின்னர் ஹரபான் தலைவர் மன்றத்திடம் ஒப்படைக்கப்படும்.