தியான் சுவாவிற்கு 1 மாதகால சிறைத் தண்டனை

கடந்த 2012- ஆம் ஆண்டு, போலிஸ் பயிற்சி மையத்தை (புலாபோல்) விட்டு வெளியேறச் சொல்லி, போலிஸ் இட்ட கட்டளையை மீறிய குற்றத்திற்காக தியான் சுவாவுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இன்று, அந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தனது தண்டனைக்கு எதிரான முறையீட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால், மேல்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு இத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது.

மொதாரூடின் தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு, பி.கே.ஆரின் உதவித் தலைவரான அவர், காஜாங் சிறையில் அத்தண்டனையை இன்று தொடங்கி அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

கடந்த ஏப்ரல் 29, 2012-ல், ஜாலான் செமாராக் புலாபோல் வளாகத்தை விட்டு வெளியேற மறுத்ததால், அவர் மீது தடை செய்யப்பட்டப் பகுதி  மற்றும் இடங்கள் சட்டம் 1959-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவம், கோலாலம்பூரில் பெர்சே 3 பேரணியில் அவர் கைதான ஒரு நாளுக்குப் பின் நடந்தது.

முன்னதாக, தியான் சுவா தனது வழக்குரைஞர் என்.சுரேந்திரனை தனக்கு ஆதரவாக வழக்காடுவதிலிருந்து நீக்கியதோடு, சிறை செல்ல தயாராக இருப்பதாகவும்  திடீரென அறிவித்தார்.

குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது, கடந்த 28 ஏப்ரல் 2012-ல், பெர்சே 3 பேரணியில் கலந்துகொண்ட 500 பங்கேற்பாளர்களுடன் தான் கைது செய்யப்பட்டு, புலாபோலுக்கு அனுப்பப்பட்டதாக தியான் சுவா தெரிவித்தார்.

“அப்பேரணியில் கலந்துகொண்டதற்காக நான் கைது செய்யப்படவில்லை, மாறாக, நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலாபோலில், அன்று இருந்ததற்காக என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,” என்றார்.

“தடை செய்யப்பட்ட இடத்தில், அதாவது புலாபோலில், நான் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நீதிமன்றத்தில் நான் என் மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற்றுக்கொள்ள விரும்புவதை தெரிவிக்கிறேன்.”

தான் கட்டாயத்தின் பேரிலும், தனது அனுமதியின்றியும் அங்கு இருந்ததால், இக்குற்றச்சாட்டை தன் மீது திணிப்பது ஞாயமற்றது என தியான் சுவா கூறினார்.

“அதன் காரணமாக, ஜனவரி 24, 2014-ல், செஷன் நீதிமன்றத்தில் தன் மீது குற்றம் சுமத்தப்பட்டு, 1 மாத சிறைதன்டனையும் 1000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.”

“இந்த ஊழல் அமைப்பு முறையை மாற்ற, நான் சிறைக்குத்தான் செல்ல வேண்டும் என்றால், நான் அதற்கு தயாராக இருக்கிறேன். அதேசமயம், நான் சிறைக்குச் செல்வதால், நான் குற்றவாளி என ஒப்புக்கொண்டதாக அர்த்தம் இல்லை, உண்மையில் நான் அரசாங்கத்தின் தவற்றைச் சுட்டிக்காட்டவே விரும்புகிறேன்,” என அவர் மேலும் சொன்னார்.

நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும் முன், பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மற்றும் பிகேஆர் தலைவர்களைச் சந்தித்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

தியான் சுவாவின் முடிவு தனக்கு அதிர்ச்சியை அளிப்பதாக, பிகேஆரின் தலைவர் டாக்டர் வான் அஷிஷா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

“நேற்று நான் அவரின் முடிவு குறித்து கேட்டபோது, அவர் என்னிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார்,” என்றார் அவர்.

 

இதற்கிடையே, தியான் சுவாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இதனால் பாதகம் ஏதுமில்லை என்று அவரின் இன்னொரு வழக்கறிஞரான லத்தீப்பா கோயா நீதிமன்றத்திற்கு வெளியே சந்தித்தபோது தெளிவுபடுத்தினார்.

“சிறை தண்டனையை ஏற்றுக்கொண்டால், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாங்கள் அவரிடம் அறிவுறுத்திவிட்டோம், ஆனால், அவர் சிறை செல்ல பயப்படவில்லை எனவும், தண்டனையை அனுபவிக்கத் தயார் எனவும் கூறிவிட்டார்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.