ஜமால்: மீன் விலை உயர்வுக்கு எதிரணி-ஆதரவு இடைத்தரகர்களே காரணம்

மீன்  விலைகள்   எகிறியதற்கு  எதிரணி-ஆதரவு   இடைத்தரகர்களே    காரணம்   என்கிறார்   சுங்கை  புசார்    அம்னோ  தலைவர்   ஜமால்   முகம்மட்  யூனுஸ்.

“மீன்   விலைகள்    உயர்ந்ததற்கு   இடைத்தரகர்களே   காரணம். அரசியல்  நோக்கத்துடன்தான்   அவர்கள்   இதைச்   செய்திருக்கிறார்கள்   என்று   நான்   உண்மையிலேயே    நம்புகிறேன்.

“இன்னும்   சில   மாதங்களில்   நாட்டில்    பொதுத்    தேர்தல்    நடக்கப்   போகிறது.  அதற்காகத்தான்  பக்கத்தான்   ஹரபானில்   உள்ள    குறிப்பிட்ட   கட்சிகள்     மீன்விலைகளை   விண்முட்டும்   அளவுக்கு   உயர்த்துவதற்கு   இந்த  இடைத்தரகர்களைப்   பயன்படுத்திக்க்கொண்டிருக்கிறார்கள்    என்று   நினைக்கிறேன்.

“குறிப்பிட்ட   சில   கட்சிகளுக்கு  மீன்விலை   உயர்வு   நல்ல    அரசியல்  தீனியாக  வாய்த்துள்ளது”,  என  ஜமால்   இன்று   அம்பாங்  அம்னோ   தலைமையகத்தில்    செய்தியாளர்களிடம்   கூறினார்.

ஜமால், அங்கு  நான்கு   வகை   மீன்களை   விற்பதற்கு   ஏற்பாடு   செய்திருந்தார்.    கிலோவுக்கு   ஐந்து  ரிங்கிட்  விலையில்    அந்த  மீன்கள்  விற்கப்பட்டன.  ஒருவர்   இரண்டு  கிலோ   மட்டுமே   வாங்க  முடியும்.

மீன்  விற்கும்  கடைக்கு  உயரே   ஒரு  பதாதை   கட்டப்பட்டிருந்தது.  அதில்  “இடைத்தரகர்கள்   யார்?  டிஏபி  மீன்  தவக்கேகள்தான்”  என்று   எழுதப்பட்டிருந்தது.

ஆனால்,   ஜமால்,   அது   அந்த    அரசியல்  கட்சியைக்  குறிப்பிடுகிறது   என்பதை  மறுத்தார்.