மலேசிய விமான நிறுவனத்தின் காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள் அது தொடர்பான வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் விமானத்துக்கு என்னவானது என்ற மர்மம் நீடிப்பது “ஏற்றுக்கொள்ளமுடியாதது” என்று கூறினார்கள்.
“விமானத்தைக் கண்டுபிடித்தாலொழிய அதற்கு என்னவானது என்பதைத் துல்லியமாகக் கூறுவதற்கில்லை”, என ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு அவ்வறிக்கையில் கூறியது.
“நவீன வான்பயண யுகத்தில் பெரிய வணிக விமானமொன்று காணாமல் போய் அந்த விமானத்துக்கு என்னவானது, விமானத்தில் இருந்தவர்கள் என்னவானார்கள் என்பது உலகுக்குத் தெரியாமலிருக்கிறது என்பது நம்ப முடியாதது, நிச்சயமாக, சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது”, என்றது குறிப்பிட்டது.
2014 மார்ச் 8-இல், 239 பேருடன் கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங் சென்று கொண்டிருந்த அந்த போயிங் 777 விமானம் மாயமானது மிகப் பெரிய வான்பயண மர்மமாக மாறியுள்ளது.
விமானத்தைக் கண்டுபிடிக்க ஆஸ்திரேலியா தலைமையில் மலேசியாவும் சீனாவும் மேற்கொண்ட மிகப் பெரிய தேடல் பணி மர்மம் எதுவும் துலங்காததால் ஜனவரியில் கைவிடப்பட்டது.