காஜாங் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர்கள் சிலர், தங்கள் வீடுகளிலிருந்து அக்டோபர் 22-ல் வெளியேற ஒப்புக் கொண்டதால், அவர்கள் குடியிருந்த 6 வீடுகள் உடைபடுவதிலிருந்து தப்பின.
இன்று காலை, உலு லங்காட் மாவட்ட நில அலுவலகம் மற்றும் காவல்துறையினரின் அமலாக்கப் பிரிவினர் சுங்கை ஜெலோக், காஜாங், சிலாங்கூரில் அமைந்துள்ள முன்னாள் மருத்துவமனை பணியாளர்கள் வசிக்கும் வீடுகளை இடித்துத் தள்ள முற்பட்டனர்.
“அக்டோபர் 22 வரை, நான் உங்களுக்கு நேரம் கொடுக்கிறேன். தீபாவளி அக்டோபர் 18. இது என் இறுதி வாய்ப்பாகும்.”
“காஜாங் மருத்துவமனைக்குக் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளைத் தொடங்க, நவம்பர் 1-ம் தேதி குத்தகையாளர்கள் வருவார்கள்,” எனப் பல மணி நேரங்களுக்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நிலம் மற்றும் சுரங்கத் துறையின், துணை இயக்குநர் ரஷிடி ருஸ்லான் தெரிவித்தார்.
ஆறு குடும்பங்களுக்கும், ரிம 3,600 காசோலைகளாக வழங்கப்பட்டுவிட்டன. ஜாலான் ரெக்கோ, கஜாங்கில், மாநில அரசு அவர்களுக்கு 8 லோட் நிலங்களை உறுதிப்படுத்துவதற்கு முன், தற்காலிக வீடுகளில் அவர்கள் தங்க, இந்நிதி அவர்களுக்கு உதவும் எனக் கூறப்பட்டது.
அந்த 6 குடியிருப்பாளர்களில் ஒருவரான ஆர்.சண்முகநாதன், ஜாலான் ரேக்கோவில் 6 லோட் நிலங்கள் கொடுப்பதாக, அதிகாரிகள் கடிதம் மூலம் வாக்குறுதி கொடுத்தால், அவ்விடத்தைக் காலிசெய்ய தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
“முன்னதாக நாங்கள் 85% வாக்குறுதிகளைப் பெற்றுவிட்டோம். 100% நம்பிக்கை வர, எழுத்துபூர்வமாக கொடுங்கள்,” என்று சண்முகநாதன் கேட்டுக்கொண்டார்.
மாநில அரசு முன்வைத்த இரண்டு சலுகைகளை, ‘ரூமா சிலாங்கூர்கூ’ அடுக்குமாடி வீடு மற்றும் ஜனவரி மாதத்தில் நிலம் ஆகியவற்றை, ரஷிடி குடியிருப்பாளர்களுக்கு நினைவுபடுத்தினார்.
இருப்பினும், குடியிருப்பாளர்கள் அவ்வீடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தனர், வீடுகள் சிறியதாக இருப்பதால், அவர்களது குடும்பங்களுக்கு அது வசதிபடாது என அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, காஜாங் கவுன்சிலர் ஆர்.தியாகராஜனும் , எழுத்து பூர்வமாகக் கடிதம் கிடைக்காத வரை, அங்கிருந்து வெளியேற வேண்டாமெனக் குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, காஜாங் சட்டமன்ற உறுப்பினர் வான் அஷிஷா, அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைத் தள்ளிவைக்குமாறு மாவட்ட நில அலுவலகத்தைக் கடிதம் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும், மாவட்ட நில அலுவலகம் அதனைப் பொருட்படுத்தாது, இன்று காலை, காவல்துறையினரின் உதவியோடு அவர்களின் வீடுகளை உடைக்க களமிறங்கியுள்ளது.
இதற்கிடையே, செய்தி அறிந்து அங்கு விரைந்த பி.எஸ்.எம். கட்சி உறுப்பினர்கள் குடியிருப்பாளர்களோடு இணைந்து, வீடு உடைபடுவதைத் தடுத்து நிறுத்தப் போராடியதோடு, பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டனர்.
“பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இருக்கும் சிலாங்கூர் மாநிலத்தில், அவர்களின் சட்டமன்ற உறுப்பினரும் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவருமான வான் அஷிஷாவின் கடிதம் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?” என பி.எஸ்.எம். கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ். அருட்செல்வன் கேள்வி எழுப்பினார்.
இன்னும் சில நாட்களில் தீபாவளியைக் கொண்டாடவிருக்கும் அவர்களை, முறையான இழப்பீடு இல்லாமல், மாற்று வீட்டுக்கான எழுத்துப்பூர்வ வாக்குறுதியும் இல்லாமல் இவ்வாறு துரத்தியடிப்பது சரியல்ல என்று அவர் மேலும் கூறினார்.
ரொம்ப ரொம்ப நல்ல காரியம். நல்ல நேரம் பார்த்து செய்யுங்க.
உலு லங்காட் சிலாங்கூர் மாநில ஆட்சிக்கு உட்பட்டது தானே ! ஏன் இந்த அவலம் ! அம்னோ காரன் செய்ததை தானே இவனும் செய்கிறான் ! PKR , DAP , ஆட்சிக்கு வந்தால் தமிழன் உச்சத்துக்கு சென்று விடுவான் ! என்பது இதுதானா ! சிவாஜி தி பாஸ் ! அனுவரின் மனைவியின் , PKR தேசிய தலைவரின் தொகுதியிலேயே இவ்விதம் நடக்கிறது ! மற்ற இடங்களில் தமிழன் படும் அவதியை சொல்ல வேண்டாம் ! எவன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனின் தலை எழுத்து இதுதான் !!