மலேசிய ஏர்லைன்ஸ் சிஸ்டம் பெர்ஹாட்டின் (மாஸ்) ஊழியர்கள், கடந்த 2 ஆண்டுகளாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னும் அவர்களைத் தொழிற்துறை நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்று, ஆலோசனை பெறாமல் இருக்கும் மனித வள அமைச்சர் , ரிச்சர்ட் ரியோட்டின் போக்கை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) சாடியுள்ளது.
கடந்த 2015-ல், ‘அதிகமான பணியாளர்கள்’ எனும் காரணம் கூறி, 6000-த்திற்கும் மேற்பட்ட மாஸ் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து, மலேசிய விமான சிப்பந்திகள் தேசியத் தொழிற்சங்கம் (நுஃபாம்) தொழிற்துறை தொடர்பு இலாகாவில் வழக்கு பதிவு செய்தது என்று அக்கட்சியின் தொழிலாளர் பிரிவு பொறுப்பாளர் சிவரஞ்சனி மாணிக்கம் தெரிவித்தார்.
“சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், இப்பிரச்சனை அமைச்சரின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. ஒரு வழக்கு தொழிற்துறை நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அமைச்சருக்கு உண்டு. ஆனால், அமைச்சர் ரிச்சர்ட் தொழிற்துறை நீதிமன்றத்தில் விசாரிக்காமலேயே அந்த வழக்கை தள்ளுபடி செய்தது அதிர்ச்சியளிக்கின்றது,” என்று சிவரஞ்சனி கூறினார்.
எந்தவொரு சூழ்நிலையிலும், ஒரு பிரச்சனையை நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டுசெல்ல ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், ஆனால், அது இங்கு நடக்காதது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
“சுமார் 3500 மாஸ் முன்னாள் ஊழியர்கள், அவர்களின் வழக்கை அமைச்சர் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்வார் எனக் காத்திருக்கிறார்கள். ஆனால், அமைச்சர் இன்னும் இதுகுறித்து எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருக்கிறார்,” என்றார் அவர்.
இவ்வழக்கு இன்னும் ஏன் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை எனக் கேட்டதற்கு, “காரணத்தை உங்களிடம் சொல்லத் தேவையில்லை,” என அவர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததாகவும் பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினருமான சிவரஞ்சனி வருத்தம் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்க விரும்பும் ஓர் அமைச்சர், அவர்கள் தரப்பு நியாயத்தைச் செவிமடுக்க, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பி.எஸ்.எம். எண்ணுவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, இவ்வழக்கை உடனடியாக தொழிற்துறை நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டுமென அமைச்சர் ரிச்சர்ட் ரியோவை பி.எஸ்.எம். கேட்டுக்கொள்வதாக சிவரஞ்சனி ஒரு பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார்.
“அதுமட்டுமின்றி, தொழிற்துறை சட்டத்தில் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அகற்றுவதோடு; ஒரு பணியாளரை மனிதவள அமைச்சரின் ஒப்புதலின் வழியே நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லும் முறையையும் நீக்க வேண்டும். அப்போதுதான் தொழிலாளர்கள் எந்தவொரு தரப்பின் தலையீடும் இல்லாமல், தங்கள் நலனைப் பாதுகாத்துகொள்ள முடியும்,” எனவும் சிவரஞ்சனி சொன்னார்.