என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட விவகாரம் தொடர்பில் விவாதம் நடத்த வருமாறு பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் விடுத்த சவாலை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
“நான் யாருடனும் விவாதம் நடத்தத் தயார்,” என கைரி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
ராபிஸி விடுத்துள்ள சவால் பற்ரி நிருபர்கள் வினவிய போது அவர் அவ்வாறு பதில் அளித்தார்.
“கொள்கை அளவில் நான் தயார். ஆனால் அதற்கான நேரம் முக்கியமான கேள்வி ஆகும். ஏனெனில் அம்னோ ஆண்டு பொதுக் கூட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.”
ஊடகங்கள் வழி வாதாடுவதற்கு பதில் தம்முடன் நேரடியாக அந்த விவகாரம் மீது விவாதம் நடத்த வருமாறு ராபிஸி கடந்த திங்கட்கிழமை கைரிக்கு சவால் விடுத்திருந்தார்.
கூட்டரசு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் கணவரும் பிள்ளைகளும் நடத்தி வரும் அவர்களுக்குச் சொந்தமான என்எப்சி என்ற நிறுவனம் மீது பிகேஆர் கடுமையான தாக்குதலைத் தொடுத்து வருகிறது.
அந்த நிறுவனத்துக்குக் கால்நடை வளர்ப்பில் அனுபவமில்லை என்றும் எளிய வட்டியில் அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் கடனைப் பயன்படுத்துவதில் முறைகேடாக நடந்து கொண்டுள்ளது என்றும் பிகேஆர் குற்றம் சாட்டுகிறது.
அந்த விவகாரம் மீது ராபிஸி அவ்வப்போது விடுக்கும் அறிக்கைகளை கைரி பதில் அளித்து வந்தார்.
அமைச்சரது குடும்பம் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்வதற்கு 800,000 ரிங்கிட் செலவு செய்வதற்கும் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றை 9.8 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்குவதற்கும் என்எப்சி நிதிகளைப் பயன்படுத்தியது இதர பல விஷயங்களில் அடங்கும்.
ஆனால் தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் முறைகேடுகள் பற்றியும் குளறுபடிகள் பற்றியும் தெரிவிக்கப்பட்ட போதிலும் என்எப்சி இதுவரையில் குறைகூறல்களுக்குப் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்து வருகிறது.