என்ஜிஓ ஒன்று புத்ரா ஜெயா தொடக்கநிலை பள்ளியில் அம்னோவை நினைவுபடுத்தும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததையும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதையும் குறைகூறியதை அடுத்து கூட்டரசு பிஎன் இளைஞர் தலைவர் முகம்மட் ரஸ்லான் ரபில் அதைத் தற்காத்துப் பேசியுள்ளார்.
“நானும் அங்கிருந்தேன், அங்கு ‘நம் நாட்டின் விடுதலைதான்’ விவரிக்கப்பட்டது.
“மலாயன் யூனியனுக்கு எதிரான போராட்டம், துங்கு அப்துல் ரஹ்மான் இலண்டன் சென்றது. இது இரத்தம் சிந்தாமலேயே மலாயா சுதந்திரம் பெற்றதைக் கூறும் வரலாறு”, என ரஸ்லான் ஓர் அறிக்கையில் கூறினார்.
Parent Action Group for Education (பேஜ்) என்னும் அரசுசாரா அமைப்பு ஒன்று பள்ளிகள் “அரசியல் நாற்றங்கால்களாக” மாறி வருகின்றன என்றும் அதனால் தேசியப் பள்ளிகள்மீது நம்பிக்கை குறைந்து வருகிறது என்றும் கூறியிருந்ததற்கு அவர் இவ்வாறு எதிர்வினை ஆற்றியிருந்தார்.
நேற்று புத்ரா ஜெயா பள்ளி ஒன்றில் மாணவர்கள் ஹிடுப் அம்னோ(அம்னோ வாழ்க’ ) என முழக்கமிட்டதுடன் கட்சிக் கொடியை அசைத்து கட்சிப் பாடலையும் பாடினார்கள்.
ஒரு கட்டத்தில் “Hidup Umno, Hidup Melayu. Dulu, Kini dan Selamanya (அம்னோ வாழ்க அன்றும் இன்றும் என்றும்)” என்ற வாசகத்தைக் கொண்ட பதாதை ஒன்றும் மேடையில் காட்சியளித்தது.
மாணவர்கள் துங்கு அப்துல் இலண்டன் செல்லுமுன்னர் துன் வீ.தி. சம்பந்தன், தான் செங் லோக் ஆகியோருடன் சேர்ந்து உரையாற்றியதையும் இலண்டனிலிருந்து திரும்பி வந்த துங்கு நாட்டின் விடுதலை குறித்த செய்தியை அறிவித்ததையும்தான் மேடையில் நடித்துக் காட்டினார்கள்.
நாட்டின் வரலாற்றைச் சித்திரிப்பதை பேஜ்ஜினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா என்றவர் வினவினார்.
இதெல்லாம் நாட்டின் வரலாறு. யாராலும் மறுக்க முடியாது. எந்த நாடும் அது சுதந்திரம் பெற்ற வரலாற்றைக் குறைத்துக்கூறவோ மாற்றவோ முயல்வதில்லை.
எனவே பேஜ் போன்ற என்ஜிஓ-கள் வெறுமனே குறை சொல்லிக் கொண்டிருக்காமல், மக்கள் நாட்டின் வரலாற்றை மறக்காமலிருக்க அவர்கள் மனத்தில் நாட்டுப்பற்றை விதைப்பது எப்படி என்று கருத்துரைக்கலாம் என்று ரஸ்லான் கூறினார்.
நாட்டுப்பற்றை விதைப்பதில் தவறில்லைதான். ஆனால் உங்களின் செயற்பாடு நீங்கள் சார்ந்த கட்சியையல்லவா பிரதிபலிக்கிறது ! நாட்டின் விடுதலைப் பற்றியது என்றால், தேசியக் கொடியைத் தவிர மற்ற கொடிகளுக்கு அங்கு என்ன வேலை ?
இந்நாட்டின் சுதந்திரத்துக்கு போராடியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்று என்று பள்ளி நிகழ்வில் நாட்டின் வரலாறு பற்றி உண்மையை கூறி கம்யூனிஸ்ட்டு கொடிகளையும் பறக்க விட்டிருந்தால் ஏற்று கொள்ளலாம்.
அதை விடுத்து இந்நாட்டின் சுதந்திரத்துக்காக ஆங்கிலேயரிடம் கையேந்தி பிச்சை எடுத்தவன் கொடியை பறக்கவிட்டு பள்ளி நிகழ்வில் நாட்டின் வரலாறு பற்றி கூறினோம் என்று கூறுவது சகிக்க முடியவில்லை.