பீர் போத்தல்களை அடித்து நொறுக்கிய குற்றத்திற்காக ஜமால் கைது செய்யப்பட்டார்

நேற்று ஷா ஆலாம், சிலாங்கூர் செயலகக் கட்டிடத்திற்கு  வெளியில் பீர் போத்தல்களை அடித்து நொறுக்கியக் குற்றத்திற்காக சுங்கை பெசார் அம்னோ தலைவர், ஜமால் யூனுஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

“செகிஞ்சாங்கில், அம்னோ தொகுதி கூட்டம் நிறைவடைந்த பிறகு, நான் போலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு மூர்க்கமான செயல். தற்போது, ஷா ஆலாம் போலிஸ் தலைமையகத்திற்கு நான் கொண்டு செல்லப்படுகிறேன்,” என ஒரு குறுந்தகவல் வாயிலாக அவர் தெரிவித்தார்.

இன்று காலை, சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர், எஸ்.ஏ.சி. ஃபாட்ஷில் அஹ்மாட், ஜமால் மற்றும் 7 ஆண்கள் இன்று காலை 1.45 மணியளவில் கைது செய்யப்பட்டதை உறுதிபடுத்தினார்.

குற்றவியல் சட்டம் 143-ஆம் பிரிவின் கீழ், விசாரணைகள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இன்று காலை அவர்கள் அனைவருக்கும் ஷா ஆலாம் நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவுக்கு விண்ணப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று காலை, சிலாங்கூர் பீர் திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜமால்  சிலாங்கூர்  செயலகக்  கட்டிடடத்துக்கு    வெளியில்   பெட்டிகளில்   பீர்  போத்தல்களை  நிரப்பி  வைத்து   ஒரு  சம்மட்டியால்   அடித்து   நொறுக்கினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலிஸ் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களைக் கைது செய்து; சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், குற்றவியல் 143-வது பிரிவின் கீழ் அவர்களை விசாரிக்க உள்ளதைப் போலிஸ் உறுதிப்படுத்தியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 6 மாதச் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் ஜமால் எதிர்கொள்வார்.

இதற்கிடையே, ஜமாலின் இதுபோன்ற நடவடிக்கைகளை அம்னோ ஒப்புக் கொள்ளவில்லை என்று அக்கட்சியின் துணைத் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

“இந்த மாதிரியான செயல்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,” என்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.