அண்மையில், புத்ரா ஜெயாவில் ஒரு தேசியப்பள்ளியில், ‘அம்னோ மற்றும் சுதந்திரம் # நெகாராகு’ என்ற கருப்பொருளில் நடந்த மாணவர்கள் வகுப்பு அலங்கரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சி போட்டி குறித்து கருத்துரைக்க துணைப் பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி மறுத்துவிட்டார்.
இன்று, கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், இது போன்ற நிகழ்ச்சிகளைப் பள்ளியில் நடத்தலாமா எனக் கேட்டதற்கு, ஷாஹிட் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார்.
“மலேசியாகினி கேட்கிறதா?” என்ற அவர், “நீங்கள் கு நானைக் கேளுங்கள்”, என்று பதிலளித்தார்.
கடந்த செவ்வாய்கிழமை, புத்ரா ஜெயா பிரிசிங்ட் 14 (1) தேசியப்பள்ளிக்கு வருகை தந்த, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் ‘அரசியல்’ உரையாற்றி உள்ளார். அதுமட்டுமின்றி, அவரின் வருகையை முன்னிட்டு, அப்பள்ளி வளாகம் அம்னோ கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதோடு, மாணவர்களும் அம்னோ கட்சிப் பாடலைப் பாடியுள்ளனர்.
அந்நிகழ்ச்சியில் பேசியபோது, தெங்கு அட்னான் ஆசிரியர்களை அம்னோவில் சேரச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு, அம்னோ துணைத் தலைவருமான ஷாஹிட் பதிலளிக்க மறுத்ததோடு, தெங்கு அட்னானையேக் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
புன்னைகை மன்னன் புன்னகையையே பதிலாகத் தருவார். சட்டியில் ஏதாவது இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு…..?