50 பாஸ் உறுப்பினர்கள் அம்னோவில் சேர்ந்தனர்

 

கிளந்தானில் தென்டோங் மாநில தொகுதியைச் சேர்ந்த 50 பாஸ் கட்சி உறுப்பினர்கள் அம்னோவில் சேர்வதற்கான தங்களின் மனு பாரங்களைக் கொடுத்தனர்.

பாஸ் கட்சி மாறிவிட்டது. அதன் முதன்மையான இலட்சியத்திலிருந்து விலகிச் சென்று விட்டது, குறிப்பாக ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் காலமான பின்னர், என்று அவர்கள் காரணம் கூறினார்.

பாஸ் கட்சியின் இன்றையச் சூழ்நிலை குறித்து தாங்கள் ஏமற்றம் அடைந்துள்ளதாக அவர்களின் பேச்சாளர் மாட் ஸாகிட் ஹூனோ கூறினார். அதன் காரணமாக அவர்கள் அம்னோவில் சேருவதற்கு முடிவு செய்ததாக கூறிய அவர், அம்னோ இஸ்லாத்திற்கும் மலாய்க்காரர்களுக்கும் போராடும் என்று நம்புவதாக மேலும் கூறினார்.

பாஸ் கட்சியும் எதிரணியினரும் மற்றவர்களைக் குறைகூறுகின்றனர், குறிப்பாக மத்திய அரசாங்கத்தை, ஆனால் அவர்களுடைய குறைபாடுகளை, ஒப்புக்கொள்வதை விடுங்கள், கண்டுகொள்வதுகூட இல்லை என்று அம்னோவில் சேர்வதற்கான மனு பாரங்களை கிளந்தான் அம்னோ தலைவர் முஸ்தாபா முகமட்டின் கொடுத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கிளந்தான் அம்னோவின் செயலாளர் செனட்டர் ஹனாபி மாமாட்டும் அங்கிருந்தார்.

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் அதிகமான பாஸ் உறுப்பினர் அம்னோவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் மாட் ஸாகிட் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில் அமைச்சரான முஸ்தாபா, பாஸ் கட்சியில் காணப்படும் இந்த மாற்றத்தை, குறிப்பாக பாஸ் கட்சியின் கோட்டையான தென்டோங்கில், வரவேற்றார்.

இதன் பின்னர், இன்னும் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்த முஸ்தாபா, அம்னோ, பின் மற்றும் பாஸ் ஆகியவை இஸ்லாத்திற்காகவும், மக்களுக்காகவும் இந்நாட்டிற்காகவும் ஒன்றுபட்டு உழைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.