‘டிஏபி & புலாவ் பினாங்’ கருப்பொருளுடன் நிகழ்வு நடத்த குழு கோரிக்கை

பினாங்கு மாநிலத்தில், ஜனநாயகச் செயற்கட்சியின் (டிஏபி) 10-ஆம் ஆண்டு ஆட்சி நிறைவையொட்டி, அடுத்த ஆண்டு மாநிலம் முழுவதிலும் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் ‘டிஏபி & புலாவ் பினாங்’ எனும் கருப்பொருளுடன் ஒரு போட்டியை நடத்த அனுமதி கேட்டு, டிஏபி தலைவர் ஒருவர் கல்வி இலாகாவிற்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

தன்னோடு இன்னும் 7 பேர் கொண்ட குழுவின் தனிப்பட்ட முன்மொழிவு அது என்றும், இதற்கும் டிஏபி-க்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றும் டிஏபி இளைஞர் பிரிவைச் சார்ந்த, ஜோசுவா வூ ஷி ஷேங் கூறியுள்ளார்.

புத்ராஜெயாவில் ஓர் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற ‘அம்னோ மற்றும் சுதந்திரம் # நெகாரா கூ’ நிகழ்வால் ஈர்க்கப்பட்டதால், பினாங்கு குடிமகன் என்ற வகையில் பினாங்கின் வரலாற்று பெருமையைக் கொண்டாட விரும்புவதாக அவர் கூறினார்.

மாணவர்கள் பினாங்கு மாநில வரலாற்றையும் , கடந்த 10 ஆண்டுகளாக பினாங்கு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு, டிஏபி ஆற்றியப் பங்கையும் அறிந்துகொள்ள இப்போட்டி உதவுமென்றும் அவர் கூறினார்.

கோலாலம்பூரில் இருக்கும் மலேசிய வரலாற்று கழகம், புத்ராஜெயாவில் நடந்த அந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்துள்ளதை அறிந்தால், பினாங்கு மாநிலக் கல்வி இலாகாவும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கும் என தான் நம்புவதாக வூ தெரிவித்தார்.

“இந்நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு எங்களுக்கு உதவும்படி கேட்டு, வரலாற்று கழகத்திற்கும் நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

“நாங்கள் டிஏபி-யின் உறுப்பினர்கள் என்றாலும், இந்நிகழ்வைக் கட்சி சார்பில் நடத்த நாங்கள் விரும்பவில்லை. காரணம் எங்கள் நோக்கம் பினாங்கு மாநிலத்தின் வரலாறு, அரசியல் அல்ல,”

நேற்று, ஜாலான் புக்கிட் கம்பீரில் உள்ள பினாங்கு மாநிலக் கல்வி இலாகாவிற்கு வூ அந்தக் கடிதத்தை அனுப்பினார்.

அந்நிகழ்வில், குறு நாடகம், வகுப்பறை அலங்காரம், பாடல் போட்டி மற்றும் வரலாற்று புதிர்ப்போட்டி ஆகியவை நடைபெறும். அதோடு, நிகழ்வு நடைபெறும் காலகட்டத்தில் டிஏபி-யின் கொடிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தற்காலிகமாக பறக்கவிடப்படும் என்றும் வூ தெரிவித்தார்.

“மாணவர்களிடம் டிஏபி கொடிகள் கொடுக்கப்படுவதோடு, டிஏபி கட்சி பாடலைப் பாடவும் மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். கடந்த 2008-ல் இருந்து, பினாங்கு மாநிலத்திற்குப் பல மேம்பாடுகளைக் கொண்டுவந்துள்ள கட்சியை நாம் அங்கீகரிக்க வேண்டும், அது நமது வரலாற்றில் ஒரு பகுதி,” என அவர் மேலும் கூறினார்.

ஆனால், நிகழ்வுக்குப் பிறகு ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ கட்சியில் சேரச்சொல்லி வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்று வூ சொன்னார்.

“ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஓட்டு போட முடியாது, கட்சியிலும் உறுப்பினராக முடியாது. ஆசிரியர்களை எடுத்துக்கொண்டால், அவர்களை நாம் வற்புறுத்த முடியாது,” என்றார் அவர்.

“கல்வி இலாகா பயப்படத் தேவையில்லை, இந்நிகழ்ச்சியில் அரசியல் சம்பந்தமாக ஒன்றும் இருக்காது. மாணவர்கள் நன்மைபெற மாநிலத்தின் வரலாறு குறித்து மட்டுமே போட்டிகள் நடைபெறும்.”

புத்ராஜெயாவில் நடந்த நிகழ்வுக்கு அனுமதி கிடைத்தது போல, இங்கும் கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக வூ தெரிவித்தார்.

அம்னோ கருப்பொருளுடன் கூடிய நிகழ்வு சட்டத்திற்குப் புறம்பானது அல்ல என்றால் டிஏபி கருப்பொருள் கொண்ட நிகழ்வும் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல.

“கல்வி இலாகா ஒருதலை பட்சமாக இல்லாமல், எங்கள் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கும் என நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்,” என வூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.