கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகள் மீது எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு பக்காத்தான் ராக்யாட் விடுத்த சவாலை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நிராகரித்துள்ளார்.
தொலைக்காட்சியில் விவாதம் நடத்தலாம் என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா விடுத்துள்ள சவால் நல்ல நோக்கத்துடன் விடுக்கப்படவில்லை என்றும் அந்தத் திட்டம் தோல்வி காண்பதற்கு வகை செய்வதே அவரது எண்ணம் என்றும் இஸ்மாயில் சொன்னார்.
“அவர்கள் மக்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் அந்தக் கடைகளை மூட வேண்டும் என விரும்புகின்றனர். “பிஎன் என்பது விலை ஏற்றம் “BN (equates to) Barang Naik (inflation)” எனக் கூறவும் விரும்புகின்றனர்.
புவா-வும் அவரது தோழர்களும் அன்றாடம் கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகள் மீது நிருபர்கள் சந்திப்பை நடத்துவதற்குப் பதில் தீர்வுகளுடன் அமைச்சை அணுகுவது உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் என்றார் இஸ்மாயில்.
“நாங்கள் தரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். அந்தக் கடைகள் தவறு செய்திருந்தால் அதனைச் சரி செய்யுமாறு நாங்கள் கேட்டுக் கொள்வோம்”, என்றார் அவர். “அந்தக் கடைகளுக்கு எதிராக அவதூறு கூறுவதை குறிப்பாக விலைகள் மீது குறை கூறுதை நாங்கள் விரும்பவில்லை. அது சரியல்ல.”
இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் மாணவர் பயனீட்டாளர் இயக்கத்தை தொடக்கி வைத்த பின்னர் இஸ்மாயில் நிருபர்களிடம் பேசினார்.
.