புதன்கிழமை சுல்தான் அப்துல் அசீஸ் விமான நிலையத்துக்கு அருகில் மூன்று வீடுகளும் இரண்டு கடைவீடுகளும் உடைக்கப்பட்டதைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டும் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி , அது மாநில அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உள்பட்ட விவகாரம் அல்ல என்றார்.
“அது கூட்டரசு அரசாங்கத்தின் நிலம். அவரைச் சட்டத்தைப் பின்பற்றச் சொல்லுங்கள்.
“அவர்தான் தொலைபேசியில் அழைத்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்”, என அஸ்மின் கூறினார். முன்னதாக நகர்ப்புற நல்வாழ்வு, வீட்டு வசதி, ஊராட்சி அமைச்சர் நோ, ஒரு தொலைபேசி அழைப்பு போதும், அஸ்மின் வீட்டுடைப்பைத் தடுத்திருக்க முடியும் என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் வினவியபோது அஸ்மின் அவ்வாறு கருத்துரைத்தார்.
வீட்டுடைப்பால் அங்கு குடியிருந்த இரண்டு குடும்பங்கள் வீடின்றித் தவிப்பதாக நோ கூறினார். அவர்கள் வேறு இடம்தேடித் தங்குவதற்கு அஸ்மி அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்றாரவர்.
அதற்கு அஸ்மின், அவர்களுக்கு கோத்தா டமன்சாரா குறைந்த விலை வீடுகளில் ஆறு மாதத்துக்கு வாடகை-இன்றி தங்குவதற்கு மாநில அரசு ஏற்பாடுகள் செய்து கொடுத்திருப்பதாகக் கூறினார்.
விமான நிலைய பள்ளிவாசலின் முன்னாள் குழுவினர் தங்கியிருந்த அவ்வீடுகளை உடைக்க மலேசிய விமான நிலைய ஹோல்டிங்ஸ் உத்தரவிட பெட்டாலிங் ஜெயா மாவட்ட அலுவகம், நில அலுவலகம் மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றம் ஆகியவை உடைக்கும் பணியைச் செய்தன.
வீட்டுடைப்பை எதிர்த்து பார்டி சோசலிஸ் மலேசியா ஆர்ப்பாட்டம் செய்தது. அக்கட்சியின் ஒன்பது பேர் போலீசால் கைது செய்யப்பட்டு பிறகு போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.