பினாங்கு மாநிலக் கல்வி இலாகா, ‘டிஏபி & புலாவ் பினாங்’ எனும் கருப்பொருள் கொண்ட நிகழ்வுக்கு அனுமதி கொடுக்க மறுத்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை, புத்ராஜெயாவில் ஓர் ஆரம்பப்பள்ளியில் ‘அம்னோ & சுதந்திரம்’ எனும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதன்பால் ஈர்க்கப்பட்ட, பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழு, ‘டிஏபி & புலாவ் பினாங்’ எனும் கருப்பொருள் கொண்ட நிகழ்வை, அடுத்தாண்டு நடத்த அனுமதி கோரி, பினாங்கு மாநிலக் கல்வி இலாகா மற்றும் மலேசிய வரலாற்றுக் கழகம் இரண்டிற்கும் கடிதம் அனுப்பியிருந்தது.
மாநிலக் கல்வி இயக்குனர் ஷாரி ஒஸ்மான், கடிதத்தைப் பெற்றுள்ளதாகவும், ஆனால், அவர்களின் அந்த விண்ணப்பம் “முழுமையாக இல்லை” என்றும் சினார் ஹரியிடம் கூறியதாக ஃப்.எம்.தி. செய்தி வெளியிட்டுள்ளது.
“விண்ணப்பதாரர்களின் கையொப்பம் அக்கடித்தத்தில் இல்லாததால், அது நிறைவாக இல்லை.”
“இம்மாநிலத்தில் அரசியல் தொடர்புடைய எந்த நிகழ்வையும், பள்ளிகளில் நாங்கள் அனுமதிக்க முடியாது என்பதை நான் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் நடந்த அம்னோ-கருப்பொருள் நிகழ்ச்சியை எதிர்ப்பதற்காகவே, டிஏபி இளைஞர் பிரிவைச் சார்ந்த ஜோசுவா வூ மற்றும் ஏழு பேர், அடுத்த ஆண்டு டிஏபி கருப்பொருள் கொண்ட நிகழ்ச்சியை நடத்த கல்வி இலாகாவுக்கு அக்கடித்தத்தை எழுதியுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதத்தில், பினாங்கில் டிஏபி ஆட்சியின் 10-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்த நிகழ்வை நடத்த எண்ணியிருப்பதாக அவர்கள் கூறியிருந்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சிக்கும் டிஏபி கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை, பினாங்கு மாநிலத்தின் மைந்தர்கள் என்ற முறையில், தன்னார்வத்தினாலேயே அந்நிகழ்வை ஏற்பாடு செய்ய விரும்புவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.