அடுத்த வாரம் வருகிறது 200 ஆண்டு பழமையான நாசி பிரியாணி!

 

 

மலேசிய தேசிய நூலகம் (பிஎன்எம்) மலாய் கையெழுத்துப் பிரதிகள் மீதான மூன்று நாள் அனைத்துலக மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் 200 ஆண்டு பழமைவாய்ந்த மலாய் சமையல் குறிப்புகளில் காணப்படும் நாசி பிரியாணி பற்றியும் விவாதிக்கப்படும்.

இந்த மாநாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இந்த 200 ஆண்டு பழமைவாய்ந்த மலாய் கையெழுத்துப் பிரதிகளை மலாய் சமூகத்தினர் சேகரித்தனர் என்றும், அவை இந்தோனேசியா, போன்டியனாக்கிலிருந்து வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுவதாக பிஎன்எம் தலைமை இயக்குனர் நாபிஷா அஹமட் கூறினார்.

இது போன்ற ஆய்வின்வழி கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் கிடைப்பது கடினம் என்று கூறிய அவர், நாசி பிரியாணி, மீ கோரெங், சூப் லிடா மற்றும் சூப் காக்கி ஆகியவை மாநாட்டின் முக்கியப்பகுதிகளாக இருக்கும் என்றார்.

மேலும், காலனித்துவத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் மலாய் மருத்துவக்கலை டி.ஐ.ஒய் (நீயே செய்து கொள் – Do it yourself) ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று நாபிஷா மேலும் கூறினார்.

இந்த மாநாட்டில் மொத்தம் 27 விவாதப் பொருள்கள் பற்றி பேசப்படும். அவற்றில் ஐந்து இந்தோனேசியா பற்றியதாக இருக்கும்.

இந்த மாநாட்டின் கருப்பொருள்: “மலாய் பாரம்பரியத்தை நிலைநிறுத்துதல்: தேசிய நாகரிகத்திற்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பதாகும்.