டிஎபி கிறிஸ்துவ அரசை உருவாக்குவது சாத்தியமற்றது, மாட் சாபு

 

டிஎபி ஒரு கிறிஸ்துவ அரசை மலேசியாவில் உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுவது முற்றிலும் சாத்தியமற்றது என்று அமனா தலைவர் முகமட் சாபு பினாங்கு, கம்போங் பினாந்தியில் நேற்றிரவு கூறினார்.

“மலேசியாவை நேசிப்போம்”, கொள்ளைக்கார ஆட்சியை ஒழிப்போம்” என்ற தலைப்பிலான ஒரு செராமாவில் பேசிய மாட் சாபு, இந்தப் பொய்களை எல்லாம் அம்னோ மட்டும் பரப்பவில்லை, சில உஸ்தாஜ்களும் செய்கிறார்கள், அவர்களில் முன்னாள் அமனா தோழர்களும் அடங்குவர் என்றாரவர்.

மலேசியாவில் ஒரு கிறிஸ்துவ அரசை உருவாக்குவது சுலபமானதா என்று அவர் வினவினார்.

அதைச் செய்வதற்கு, முதலாவதாக அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு டிஎபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்க வேண்டும். அப்போதுதான் மலேசியாவை ஒரு கிறிஸ்துவ அரசாக்க முடியும்.

மேலும், மலாய் ஆட்சியாளர்களின் நிலை என்ன? இது போன்ற விவகாரங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு அவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

“நாடாளுமன்றத்தில் டிஎபி மூன்றில் இரண்டு பெரும்பானை பெற முடியுமா? அது அவர்களுக்குக் கிடைத்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். மலாய் ஆட்சியாளர்கள் அதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?, என்று மாட் சாபு வினவினார். கூட்டத்திலிருந்தவர்கள் “இல்லை” என்று குரல் எழுப்பினர்.

“இவற்றை எல்லாம் செய்ய முடியாது என்றால், பிறகு ஏன் இந்தத் தரப்பினர்களின் அம்மாதிரியான பொய்களை எல்லாம் நீங்கள் இன்னும் நம்புகிறீகள்?

“இந்த உஸ்தாஜ்கள் சொல்லும் இவற்றை எல்லாம் கேட்க நீங்கள் ஏன் போகிறீர்கள்?, என்று மாட் சாபு கேட்டதும் கூட்டத்திலிருந்தவர்கள் சிரித்தனர்.

இச்செராமாவில் மாட் சாபுடன் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மற்றும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலும் இருந்தனர்.

கடந்த மாதம், பாஸ் இளைஞர் பிரிவின் முகம்மட் காலிட் அப்துல் ஹாடி டிஎபி மலேசியாவை ஒரு கிறிஸ்துவ அரசாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது என்று கூறியிருந்தார்.