எம்எசிசி: லிம் பெற்றதாக கூறப்படும் ரிம1 பில்லியன் பற்றி விசாரிக்க முடியாது

 

டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் ரிம1 பில்லியன் கையூட்டு கொடுத்ததாக கூறப்படுவது பற்றி விசாரணை மேற்கொள்ள முடியாது என்று மலேசியா ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் (நடவடிக்கைகள்) அஸாம் பாக்கி கூறினார்.

எம்எசிசி சட்டம் 2009 இல் பண அரசியில் பற்றிய குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நாடு கடந்து வாழும் வலைத்தள பதிவாளர் ராஜா பெட்ரா கமாருடின், அவருடைய மலேசியா டுடே வலைத்தளத்தில் மகாதிர் அவரின் நோக்கங்களை அடைவதற்கு பேங்க் நெகாரா போரெக்ஸ் விவகாரம் மற்றும் அடுத்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு பாதுகாப்பான நாடாளுமன்றை தொகுதியை முக்ரீஸுக்கு கொடுப்பது பற்றி லிம் கிட் சியாங் எதுவும் பேசாமல் இருப்பதற்காக மகாதிர் அவருக்கு ரிம1 பில்லியன் கையூட்டு கொடுத்தார் என்று பதிவு செய்திருந்தார்.

இக்குற்றச்சாட்டை அம்னோவுக்குச் சொந்தமான நாளிதழ் உத்துசான் மலேசியாவும் வலைத்தளம் மலேசியன் டைஜெஸ்ட் ஆகிய இரண்டும் இன்று மீண்டும் கூறியுள்ளன.

மகாதிரும் லிம்மும் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். கூறப்படும் இந்த கையூட்டை கண்டுபிடிக்கத் தவறியதற்காக எம்எசிசியின் தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹமட் பதவி விலக வேண்டும் என்றும் கிட் சியாங் அவருக்கு சவால் விட்டுள்ளார்.

இதற்கு எதிர்விலையாற்றிய அஸாம், ஆணையம் இந்த விவகாரத்தை விசாரிக்காது என்றார்.

“இது எங்களுக்குத் தெரியுமா அல்லது இல்லையா என்பது ஒரு பிரச்சனை அல்ல. இது சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், புகார் செய்ய எவரும் முன்வரவில்லை.

“ஆனால், எனக்குத் தெரிந்தவரையில், நமது சட்டங்களின்கீழ் இது ஒரு குற்றம் அல்ல. ஆக, அதனால்தான் நாங்கள் இது குறித்து விசாரணைக்கான கோப்பை திறக்கவில்லை”, என்று அஸாம் மேலும் கூறினார்.