5 மடங்கு அதிக வாக்குகளோடு, பாகான் டத்தோவைத் தக்கவைக்க ஷாஹிட் இலக்கு

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், கடந்த பொதுத் தேர்தலைவிட 5 மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று, பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள துணைப் பிரதமர், ஷாஹிட் ஹமிடி இலக்குக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

13-வது பொதுத் தேர்தலில், பாகான் டத்தோ தொகுதியை 2,108 பெரும்பான்மை ஓட்டுகளில் அவர் வென்றார்.

தேர்தல் இயந்திரங்கள் அனைத்தும், கடுமையாக உழைத்தால் இம்முறை 5 மடங்கு அதிக ஓட்டுகளைப் பெற்று, அத்தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“பாகன் டத்தோவில் உள்ள அரசியல் சூழ்நிலை, மற்ற மாநிலங்களின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களிலிருந்து மாறுபட்டது. இங்கு நாம் பல்வேறு அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டிருக்கிறோம், அவை கட்சியின் மீது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது,” என்று அவர் கூறினார்.

இன்று, சுங்கை சுமூனில் பாகான் டத்தோ ஜே.ஆர்.பிளாஸ்-ஐ தொடக்கி வைத்து உரையாற்றியபோது, அம்னோ துணைத் தலைவருமான ஷாஹிட் இவ்வாறு கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம், அம்னோ மற்றும் பாரிசான் நேசனல் தேர்தல் இயந்திரங்களோடு இணைந்து, 14-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பிரதமர் நஜிப் தொடக்கி வைத்தது ‘ஜே.ஆர்.பிளாஸ்’ எனும் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்னோ மகளிர், புத்ரா, புத்ரி மற்றும் பாரிசானின் உறுப்புக் கட்சிகளின் தேர்தல் இயந்திரங்களை ஒருங்கிணைத்து, ‘ஜே.ஆர்.பிளாஸ்’ செயல்படும்.