14-வது பொது தேர்தல் தொகுதி விவாதத்தில், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி உண்மையாக இல்லை என்பதால், அவரின் அழைப்பை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
பி.எஸ்.எம். மத்தியச் செயற்குழு உறுப்பினரான எஸ் அருட்செல்வன், அஸ்மின் கட்சிக்குக் கொடுத்த பழைய வாக்குறுதிகளையே ‘மறுசுழற்சி செய்வதாக’ கூறினார்.
“2008 பொதுத் தேர்தலுக்குப் பின், எங்களை எதிர்க்கட்சி கூட்டணியில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டு, நாங்கள் பலமுறை பக்காத்தான் ரக்யாட்டுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம், ஆனால், அவர்களிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை,” என, இன்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அருட்செல்வன் கூறினார்.
பாரிசானுடன் நேரடி போட்டியிடும் வகையில், நாற்காலி பகிர்வு விவாதத்திற்கு தாம் விடுத்த அழைப்பைச், சாதகமாகப் பார்க்க வேண்டுமென நேற்று அஸ்மின் தெரிவித்தார்.
“சீர்திருத்தம் மற்றும் மாற்றத்திற்கு முயற்சிக்கும் பி.எஸ்.எம். அல்லது அம்னோ அல்லாத மற்ற எந்தக் கட்சியுடனும் கலந்துபேச நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பி.எஸ்.எம்.-க்கும் பக்காத்தான் ஹராப்பனுக்கும் இடையில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இல்லை என்றாலும், 14-வது பொதுத் தேர்தலில் 97% நாடாளுமன்ற இடங்களில் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாக அருட்செல்வன் கூறினார்.
“222 நாடாளுமன்ற இடங்களில், 3% தொகுதிகளில் மட்டுமே நாங்கள் எங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறோம்,” என்று அருட்செல்வன் தெரிவித்தார்.
கடந்த மாதம், சிலாங்கூரில் சுபாங், உலு லங்காட் மற்றும் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக பி.எஸ்.எம். அறிவித்தது.
தற்போது அத்தொகுதிகளில் முறையே, ஆர். சிவராசா (பிகேஆர்) , சே ரொஸ்லி சே மாட் (பாஸ்) மற்றும் பி.கமலநாதன் (ம.இ.கா) ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும், செமிஞ்சே, கோத்தா டாமான்சாரா, ஶ்ரீ முடா மற்றும் பெலாபுஹான் கிளேங் (கிள்ளான் துறைமுகம்) ஆகிய சட்டமன்றங்களில் போட்டியிட உள்ளதாகவும் பி.எஸ்.எம். அறிவித்திருந்தது.