போலீஸ் அடித்ததால்தான் கருணாநிதி இறந்தார் என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிலைநிறுத்தியது

 

போலீஸ் தடுப்புக்காவல் கைதி பி. கருணாநிதியின் மரணம் அவரை போலீஸ்காரர்களும் இதர தடுப்புக்காவல் கைதிகளும் அடித்ததால்தான் ஏற்பட்டது என்ற கரோனரின் தீர்ப்பை சிரம்பான் உயர்நீதிமன்றம் நிலைநிறுத்தியது.

அரசாங்கம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுவை நிராகரித்த நீதிபதி முகம்மட் ஜமில் ஹுசென், கரோனரின் தீர்ப்பை நிராகரிப்பதற்கு அடிப்படை காரணங்கள் கிடையாது என்று கூறினார்.

விசாரணை நடவடிக்கைகளின் பதிவுகளை புனராய்வு செய்த பின்னரும், பாதிக்கப்பட்டவரின் குடும்ப வழக்குரைஞர் மற்றும் வழக்குரைஞர்கள் மன்றத்தைப் பிரதிநிதித்த (பார் கவுன்சில்) வழக்குரைஞர் ஆகியோரின் விவாதத்தை கருத்தில் எடுத்துக்கொண்ட பின்னரும், இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று நீதிபதி கூறினார்.

மேலும், சம்பந்தப்பட்ட வழக்கில் உண்மையாக நடந்த செயல்களை தாம் மறுஆய்வு செய்து கவனமாக படித்ததாகவும், அவற்றின் அடிப்படையில் கரோனர் அளித்திருந்த தீர்ப்பை தள்ளுபடி செய்வதற்கான அடிப்படை காரணங்கள் ஏதும் இல்லை என்று நீதிபதி முகம்மட் ஜமில் கூறியதாக என்எஸ்டி செய்தி தெரிவிக்கிறது.

கருணாநிதியின் குடும்பத்தைப் பிரதிநிதித்த வழக்குரைஞர் எரிக் பால்சன், இந்தத் தீர்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று அரசு தரப்பு வழக்குரைஞரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.