டிஏபி-ஐ சேர்ந்த ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் பூ செங் ஹாவ் மலேசிய சோசலிசக் கட்சியைப் பக்காத்தான் ஹராப்பானின் 5-வது உறுப்புக் கட்சியாக இணைத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
பி.எஸ்.எம். இணைவதால் எதிர்க்கட்சி கூட்டணியின் வலிமை அதிகரிக்கும் என்பதை, ஹராப்பான் தலைமைத்துவம் உணர்ந்து, அவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஹராப்பான் கூட்டணியில் இணைய அழைப்பு கொடுக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
“குளிரூட்டப்பட்ட அறைகளின் நான்கு சுவர்களுக்குள் கருத்தியல் பேசுபவர்களுடன் ஒப்பிடும்போது, பி.எஸ்.எம்.-ன் அடிமட்ட பணிகள், ஹராப்பானுக்கு ஒரு கூடுதல் வலிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.”
“சிறுபான்மையினர் மத்தியில், பி.எஸ்.எம்.-ன் உண்மையான அடிமட்ட வேலை, ஹராப்பான் வெற்றி பெற உதவும்” என, நேற்று நடந்த ஒரு முகநூல் நேரடி கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இவ்வாறு பேசினார்.
அந்நிகழ்ச்சியில் அவரோடு, பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர், ஜோகூர் பிகேஆர் துணைத் தலைவர் ஜிம்மி புவா, ஜோகூர் அமானா துணைத் தலைவர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சி கூட்டணி, பாரிசான் நேசனலைப் போலவே தோற்றமளிக்கிறது, எனும் சில வாக்காளர்களின் பார்வையை, ஹராப்பான் அகற்ற வேண்டும் என்றும் பூ கூறினார்.
“பிகேஆர், டிஏபி மற்றும் அமானா இனவாதக் கட்சியாக இல்லாமல், பிற சித்தாந்தக் கட்சிகளுக்கும் நடுநிலையாக செயல்பட்டு, அனைத்து மலேசியர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டணியாக திகழ வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
“கிராமப்புற மலாய்க்காரர்களின் ஆதரவை மட்டும் நம்பி, அம்னோ ஆதிக்கத்தில் இருக்கும் பாரிசானை எதிர்கொள்ள முடியாது, நகர்புற மற்றும் சிறுபான்மை மக்களால், அமைதியாகப் புறக்கணிக்கப்படுவதையும் ஹராப்பான் கருத்தில் கொள்ள வேண்டும்,” என அவர் மேலும் தெரியப்படுத்தினார்.
இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இதர சாதாரண தொழிலாளர்கள் மீது, நீண்ட காலமாக பி.எஸ்.எம். காட்டிவரும் கவனத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் டாக்டர் பூ கூறினார்.
டாக்டர் பூ அவர்களின் கருத்துக்கு தலை வணங்குகிறேன். தைரியமான கருத்துக்கள். அப்பனுக்கும் (கிட் சியாங்) மவனுக்கும் (குவான் எங்) பயந்து கோழிக் குஞ்சு போல அடங்கி, ஒடுங்கி, நடுங்கி, முடங்கி, நடந்துகொள்ளும் பெரும்பாலான டி.ஏ.பி. தலைவர்களின் மத்தியில் துணிச்சலுடன் செயல்படும் தலைவர் இவர். அப்பனும் மவனும் இவரை கூடிய விரைவில் கழுத்தறுத்து விடுவார்களே!
ஒற்றுமையே பலம்.