சிவநேசன் : பி.எஸ்.எம்.-உடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது

பேராக் மாநில டிஏபி உதவித் தலைவர் எ.சிவநேசன், பி.எஸ்.எம்.-உடன் ஒத்துழைப்பதால் டிஏபி-க்கு எந்தவொரு பலனும் இல்லை என்பதால், அக்கட்சியை ஹராப்பானுடன் இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை நிராகரித்தார்.

“அவர்கள் எங்களுக்கு விரோதமாக செயல்பட்டாலும் சரி, உண்மையாக ஒத்துழைக்க நினைத்தாலும் சரி, பக்காத்தான் ஹராப்பானுக்கு அதனால் இழப்பு எதுவும் இல்லை,” என்று சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் கூறினார்.

“அவர்கள் பேச்சுவார்த்தைக்குத் திறந்த மனதோடு வர வேண்டும். முன்னதாகவே ஒன்றைத் தீர்மானித்துவிட்டு வந்தால், அது பயனற்றது. டிஏபி பி.எஸ்.எம்.-காக நேரத்தை வீணடிக்காது. அது சரியல்ல,” என்றும் அவர் கூறினார்.

“பி.எஸ்.எம். என்று வரும்போது, நம்பிக்கை மற்றும் கைச் சுத்தம் போன்றவை சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது,” என்றும் அவர் சொன்னார்.

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, தேர்தல் இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விடுத்த திறந்த அழைப்பை, பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் நிராகரித்தது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தார்.

பக்காத்தான் ரக்யாட் கூட்டணியில் இணைய பி.எஸ்.எம். எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பக்காத்தான் ஹராப்பான் அமைக்கப்பட்டபோது, பி.எஸ்.எம்.-க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

“முன்னதாக, ஹராப்பான் தங்களை அழைக்கவில்லை என பி.எஸ்.எம். குற்றஞ்சாட்டியது,  இப்போது அழைப்பு விடுத்தால் வேறு கதை சொல்கிறார்கள்,” என்றார் சிவநேசன்.

டாக்டர் ஜெயக்குமார் கைவசமுள்ள பி.எஸ்.எம்.-ன் ஒரே நாடாளுமன்றத் தொகுதியான சுங்கை சிப்புட்டில் இம்முறை டிஏபி போட்டியிட உள்ளதாகவும் அவர் சொன்னார்.

“சுங்கை சிப்புட்டில் டிஏபி 1974-ம் ஆண்டு முதல் இருக்கிறது. எங்களுக்கு பி.எஸ்.எம்.-ஐ விட அதிகமான கிளைகளும் ஆதரவாளர்களும் அங்கு உண்டு. அதோடு, அவர்கள் அங்கு பக்காத்தானின் ஆதரவிலேயே வெற்றி பெற்றனர்,” என்றும் சுங்கை சிப்புட்டில் போட்டியிடும் வாய்ப்பு கொண்டுள்ள சிவநேசன் தெரிவித்தார்.

2008, 12-வது பொதுத் தேர்தலில், பிகேஆரின் டிக்கெட்டில் முன்னாள் ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.சாமிவேலுவை ஜெயக்குமார் தோற்கடித்தார். அதற்கடுத்து, 13-வது பொதுத் தேர்தலிலும், இரண்டாவது முறையாகவும் தனது நாற்காலியை ஜெயக்குமார் தக்கவைத்துக் கொண்டார்.

சிவநேசனின் புலம்பல் ‘புதிதல்ல’

இதற்கிடையே, சிவநேசனின் கூற்றுக்குப் பதிலளித்த பி.எஸ்.எம். கட்சியின் தலைமை செயலாளர் ஆ.சிவராஜன், “அந்த டிஏபி தலைவரின் பேச்சு ஒன்றும் புதிதல்ல,” என்றார்.

பேச்சுவார்த்தைக்காக பி.எஸ்.எம்.-ஐ அழைப்பதற்கு முன், எதிர்க்கட்சி கூட்டணி ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“பி.எஸ்.எம். போட்டியிடும் 20 இடங்களிலும் பாஸ், பி.என். மற்றும் ஹராப்பான் என அனைத்து கட்சிகளும் போட்டியிடுகின்றன. நாங்கள் ஹராப்பானை மட்டும் எதிர்த்து போட்டியிடுகிறோம் என்று எண்ணுவது மடமைத் தனமானது,” என்றார் அவர்.

“பக்காத்தான் ஹராப்பான் ஒரு தெளிவான நிலையில் இல்லை என்பதனை சிவநேசனின் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது. 2008-ஆம் ஆண்டு முதல் நாங்கள் விண்ணப்பித்து வருகிறோம், சில தலைவர்கள் எங்களை அழைத்தார்கள், சில தலைவர்கள் எங்களை ஏமாற்றினார்கள்.”

“இந்த கலவையான எதிர்வினைகள் எங்களுக்குப் புதிதல்ல. ஹராப்பான் தங்களுடன் கலந்துபேசி ஒரு முடிவெடுத்தப்பின் எங்களை அணுக வேண்டும், அதுதான் சரி,” என்றும் சிவராஜன் சொன்னார்.