மகாதிர்: மலாய்க்காரர்களின் பெரும் பிரச்சனை போதைப்பொருள், மதுபானம் அல்ல

 

போதைப்பொருளுக்கு அடிமையாதல் மலாய்க்காரர்களின் பெரும் பிரச்சனை. அப்பிரச்சனையைத் தீர்க்க சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முஸ்லிம்-அல்லாதவர்கள் மற்றும் பீர் விழாவைத் துரத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று மகாதிர் முகம்மட் இன்று கூறினார்.

முஸ்லிம்-அல்லாதவர்கள் மதுபானம் அருந்துவதில் தமக்குப் பிரச்சனை ஏதும் இல்லை என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

“எனக்கு மிகக் கவலையளிப்பது முஸ்லிம் இளைஞர்களிடையே இருக்கும் போதைப்பொருள் பழக்கம். அது, மற்ற சிலவற்றுடன், 20 தாபிஸ் பள்ளி மாணவர்களின் மரணத்துக்கு காரணமாயிற்று”, என்று மகாதிர் கோலாலம்பூரில் டாருல் குரான் இத்திபாக்கியா பள்ளியில் ஏற்பட்ட தீ சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டார். அப்பள்ளியில் போதைப்பொருள் மயக்கத்திலிருந்த மாணவர்களில் சிலர் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட சச்சரவைத் தொடர்ந்து அப்பள்ளிக்குத் தீ இட்டனர் என்று கூறப்படுகிறது.

“இந்த மாணவர்களின் கொலையை முஸ்லிம்கள் மிகவும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிகிறது. ஆம், இதை விதியாக அவர்கள் காண்கின்றனர். ஆகவே, அதை ஏற்றுக்கொள்கின்றனர். இப்பள்ளியின் தீயில் இறந்த மாணவர்கள் தங்களுடையப் பெற்றோர்களின் வருகைக்காக சொர்க்க வாசலில் பிற்காலத்தில் காத்திருப்பார்கள் இதைத்தான் அப்பள்ளியின் ஆசிரியர் சொல்லியிருந்தார்.

“என்னுடைய கேள்வி: நமக்கு ஏன் இந்த மலாய்/முஸ்லிம் இளைஞர்கள் போதைப்பொருளில் சம்பந்தப்பட்டுள்ள பிரச்சனை இருக்கிறது? (இந்த அளவுக்கு) சீன மற்றும் இந்திய இளைஞர்கள் போதைப்பொருளில் சம்பந்தப்பட்டிருப்பது பற்றி நாம் கேள்விப்படுவதில்லை? இதுவும் விதியா? மலாய்/முஸ்லிம் இளைஞர்கள் போதைப்பொருளை விலக்கிவிடுவதற்கு ஏதேனும் செய்ய முடியாதா?, என்று மகாதிர் அவரது வலைப்பதிவில் கேட்கிறார்.