மும்முனைப் போட்டியைத் தவிர்க்க, பி.எஸ்.எம். ஹராப்பானுடன் ஒத்துழைக்க விரும்புகிறது

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளைச் சிதறடிக்காமல் இருக்க, பக்காத்தான் ஹராப்பானுடன் ‘தேர்தல் கூட்டணி’ வைக்க மலேசிய சோசலிசக் கட்சி விரும்புகிறது.

பி.எஸ்.எம். 15 சட்டமன்றங்களிலும் 5 நாடாளுமன்றங்களிலும் போட்டியிடும் எண்ணம் கொண்டுள்ளதால், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதைத் தவிர்க்க இது உதவும் என, பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்த டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் தெரிவித்தார்.

இனம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஏழைகளின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கு, பி.எஸ்.எம். நன்கு அறிமுகமானதால், பி.எஸ்.எம்.-மின் ஒத்துழைப்பின் வழி,  மக்கள் ஆதரவை அதிகரிக்க, ஹராப்பானுக்கு வாய்புள்ளதாக சுங்கை சிப்புட் எம்.பி.யான அவர் கூறினார்.

“நாங்கள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை, மாறாக, மலாய்க்காரர்கள் மற்றும் பிற இனங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறோம்,” என்றார் அவர்.

“பக்காத்தான் ஹராப்பானின் ஒரு பகுதியாக இருக்க நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை, ஆனால், வாக்குகள் உடைபடாமல் இருக்க, ‘தேர்தல் கூட்டணி’ மட்டும் அமைக்க விரும்புகிறோம்,” என்றார்.

பி.எஸ்.எம்.-ஐ எதிர்க்கட்சி கூட்டணியில் இணைத்துகொள்ள வேண்டுமென, ஹராப்பான் தலைமைத்துவத்தைக் கேட்டுக் கொண்ட, டிஏபி-யின் ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பூ செங் ஹாவ் அழைப்பு குறித்து கேட்டபோது, டாக்டர் ஜெயக்குமார் இவ்வாறு கருத்துரைத்தார்.

பி.எஸ்.எம். அடிமட்ட மக்களுடன் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளதால், அவர்களின் பணி எதிர்க்கட்சி கூட்டணியின் பலத்தை அதிகரிக்கும், எனவே, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, பி.எஸ்.எம்.-ஐ அங்கீகரிக்க வேண்டுமென, நேற்று  பூ கூறியிருந்தார்.

கடந்த ஜூன் 2015-ல், பக்காத்தான் ரக்யாட் கலைக்கப்படுவதற்கு முன், 2012-ல் அக்கூட்டணியில் இணைய பி.எஸ்.எம். முயற்சித்ததாக ஜெயக்குமார் கூறினார்.

‘தேர்தல் கூட்டணி’ அமைத்தாலும், பி.எஸ்.எம். வேட்பாளர்கள் அவர்களின் கட்சி சின்னத்திலேயேப் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2013-ல், ஜெயக்குமார் பிகேஆர் சின்னத்தில் சுங்கை சிப்புட்டில் போட்டியிட்டார். 1999 ஆம் ஆண்டிலிருந்து அத்தொகுதியில் போட்டியிட்டு வந்தவரான ஜெயக்குமார், 1999 ஆம் ஆண்டில் ச. சாமிவேலுக்கு எதிராக டிஎபி சின்னத்திலும் 2004 மற்றும் 2008 பொதுத் தேர்தல்களில் பிகேஆர் சின்னத்திலும் போட்டியிட்டார்.

1999 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில், ம.இ.கா. தேசியத் தலைவர் ச.சாமிவேலுவிடம் தோல்வி கண்ட அவர், 2008-ல் சாமிவேலுவைத் தோற்கடித்து, இன்றுவரை சுங்கை சிப்புட் தொகுதியைத் தக்கவைத்து வருகிறார்.

சுங்கை சிப்புட்டில் பி.எஸ்.எம். சின்னத்தில் போட்டியிட, பிகேஆரின் பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக, இம்மாதத் தொடக்கத்தில் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இதற்கிடையே, அந்த எதிர்க்கட்சி கூட்டணியில் இணைய, பி.எஸ்.எம். பக்காத்தான் ஹராப்பானின் தலைத்துவத்திற்குக் கடிதம் எழுதி விண்ணப்பிக்கலாம் என்று, பெர்சத்து கட்சியின் ராய்ஸ் ஹுஸ்ஷின் கூறியுள்ளார்.

“தலைமைத்துவம் மற்ற உறுப்புக் கட்சிகளுடன் கலந்துபேசி, நியாயமான முறையில் பதிலளிக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

அதோடு, ‘மலேசியாவைக் காப்பாற்ற’ எண்ணம் கொண்ட, பாரிசான் நேசனலில் இருக்கும் யாரும், பக்காத்தான் ஹராப்பானில் இணைய வேண்டுமென்று அவர் கூறினார்.

“பணம் மற்றும் ஆள் பலம் கொண்ட அம்னோவை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.