ஐஜிபி: கொள்ளையர் ஆட்சி எதிர்ப்பு பேரணியை அரங்கத்தில் நடத்துங்கள்

 

வரும் சனிக்கிழமை பாடாங் திமோரில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் கொள்ளையர் ஆட்சி எதிர்ப்பு பேரணியை கிளானா ஜெயா அரங்கத்திற்கு மாற்றும்படி அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களை போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

பாடாங் திமோரில் அப்பேரணியை நடத்துவதற்கு எதிராக அங்கு வசிப்பவர்களிடமிருந்து நான்கு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் தலைவர் முகம்மட் பூஸி ஹருண் கூறுகிறார்.

இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்று போலீஸ் முடிவு செய்துள்ளாதாக அவர் தெரிவித்தார்.

பாடாங் திமோரில் 10,000 பேர்கள்தான் கூட முடியும். ஆனால், ஏற்பாட்டாளர்கள் 100,000 மேற்பட்டவர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர் என்று ஐஜிபி சுட்டிக் காட்டினார்.

ஆகவே, இந்தப் பேரணியை கிளானா ஜெயா அரங்கத்திற்கு மாற்றும்படி போலீஸ் ஆலோசணை கூறுவதாக ஐஜிபி தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தில் எதுவும் நடக்கலாம். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அங்கு கூடுவது வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று முன்னதாக, இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஹரப்பான், திட்டமிட்டபடி பாடாங் திமோரில் இப்பேரணி நடத்தப்படும் என்று கூறியது. போலீஸ் ஆட்சேபிக்கலாம். ஆனால், கூட்டத்தை அங்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன என்று அது மேலும் கூறியது.

போலீஸ் உத்தரவுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் முடிவு ஏற்பாட்டாளர்களைப் பொறுத்தது. ஆனால், போலீஸ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டம் 2012 இன் அடிப்படையில் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்றாரவர்.