பாடாங் திமோரில் பேரணி நடந்தால், போலீஸ் நடவடிக்கை எடுக்கும்

 

பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் எதிர்வரும் சனிக்கிழமை “மலேசியாவை நேசிப்போம், கொள்ளைக்கார ஆட்சியை ஒழித்துக்கட்டுவோம்” பேரணி திட்டமிட்டப்படி நடத்தப்பட்டால் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக போலீஸ் “பொருத்தமான நடவடிக்கை” எடுக்கும் என்று போலீஸ் உறுதியளித்துள்ளது..

பேரணியை வேறொரு இடத்திற்கு மாற்ற அவர்கள் மறுத்தால், பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஐஜிபி நூர் ரஷிட் இப்ராகிம் இன்று டெக்னோஜி பார்க்கில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஆனால், அப்பேரணியின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறவில்லை.

முதலில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்; அதன் பின்னர் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றாரவர்.

அந்தப் பேரணியை எதிர்க்கட்சியினர் நடத்துவதிலிருந்து போலீஸ் அவர்களைத் தடுக்க முடியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

“ஆம், உண்மைதான். அனைவருக்கும் அவர்களுடையச் சொந்த பொறுப்பு இருக்கிறது. போலீஸ் சட்டமும் ஒழுங்கும் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும், அதே சமயத்தில் பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு சமூக மற்றும் சட்டப் பொறுப்புகள் இருக்கின்றன”, என்று நூர் ரஷிட் மேலும் கூறினார்.

நேற்று, போலீஸ் படைத் தலைவர் முகம்மட் பூஸி ஹருன் பேரணியை கிளானா ஜெயா அரங்கத்தில் நடத்தும்படி ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

துணை ஐஜிபி நூர் ரஷிட், அம்னோ சுங்கை பெசார் அம்னோ தொகுதியின் தலைவர் ஜமால் முகமட் யூனுஸுக்கும் குழப்பம் ஏதும் விளைவிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

பேரணி ஏற்பாட்டாளர் ஹரப்பான், பேரணி திட்டமிட்டபடி பாடாங் திமோரில்தான் நடக்கும் என்று கூறியது.